பெங்களூரு-''மின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆர்.ஆர்.எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்பட்டாலோ, வாடகைக்கான ஒப்பந்த கடிதம் இருந்தாலோ, அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்குவோம்,'' என மின் துறை அமைச்சர் ஜார்ஜ் தெளிவுபடுத்தினார்.
காங்கிரஸ் அரசு அறிவித்த 'கிரஹ ஜோதி' 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதற்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
மின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆர்.ஆர்., எண்ணுடன், பல வீடுகள் இருந்தால், ஒரு வீட்டுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்படும் உட்பட பல நிபந்தனைகள் இருந்தன.
இதற்கு பொது மக்களும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குறுதியின் போது, இதுபோன்று யாரும் கூறவில்லை என குற்றம் சாட்டினர்.
இதையடுத்து முதல்வர் சித்தராமையாவும், 'வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இலவச மின்சார திட்டம் பொருந்தும்' என அறிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவை, அமைச்சர் ஜார்ஜ் சந்தித்த பின், அவர் அளித்த பேட்டி:
புதிய வீடுகளுக்கும், வீடு மாறுவோருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையை, ஆர்.ஆர்., எண்ணுடன் இணைத்தால் போதும் அல்லது ஒப்பந்தக் கடிதம் இருந்தாலும் அனைவருக்கும் இலவச மின்சாரம் கிடைக்கும்.
இத்திட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இம்மாத கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும்.
கலபுரகியில் இத்திட்டம் துவக்கி வைக்கப்படும். திட்டத்தை மக்களுக்கு எளிதாக வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். இன்று அதிகாரிகளுடன் மீண்டும் கூட்டம் நடத்தி, அனைத்து குழப்பங்களுக்கும் பதில் அளிக்கப்படும்.
வாக்குறுதிகளை செயல்படுத்த மாட்டோம் என பலரும் நினைக்கின்றனர். அனைவருக்கும் இத்திட்டத்தை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.