திருப்பூர்:'அவிநாசி அருகே பஞ்சலிங்கம்பாளையம் உயர்நிலைப்பள்ளி கட்டடம், பயன்படுத்த தகுதியற்றது' என, அறிவிக்கப்படும், இனி, இடிக்காமல் இருப்பதால், புதிய கட்டடம் கட்டுவதில் தொய்வு தென்படுகிறது.
கடந்தாண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஸ்திரத்தன்மை, பொதுப்பணித்துறையினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் நிறைவடைந்த மற்றும் பழுதான நிலையில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, அங்கு புதிய கட்டடம் கட்டடவும் அனுமதி வழங்கப்பட்டது. சில கட்டடங்கள் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அவ்வகையில், அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சி, பஞ்சலிங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள இரு வகுப்பறை கட்டடங்கள் பயன்படுத்த தகுதியற்றது எனக்கூறி, 'அக்கட்டடத்தை பயன்படுத்த வேண்டாம்; இடித்து அப்புறப்படுத்தப்படும்' எனவும் அறிவித்து சென்றனர். ஆனால், இதுவரை அந்த வகுப்பறைகள் இடிக்கப்படவில்லை.
பெற்றோர் சிலர் கூறியதாவது:
பஞ்சலிங்கம்பாளையம் பள்ளியில், 215 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 10 வகுப்பறை தேவை என்ற நிலையில், 6 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. அங்குள்ள பழைய கட்டடத்தை இடித்து அகற்றும்பட்சத்தில் அங்கு, நான்கு வகுப்பறைகளை உள்ளடக்கிய இரண்டு மாடி கட்டடம் கட்ட, கல்வித்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால், பழைய கட்டடம் இடித்து அகற்றுவதில் தொய்வு நீடிக்கும் நிலையில், மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பதில் சிக்கல் ஏற்படும். அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு ஊக்குவிக்கும் நிலையில், இதுபோன்ற குறைகளை களைய வேண்டும். சம்மந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.