வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால் : மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்., - எம்.எல்.ஏ., ஒருவர், 'கடவுள் ஹனுமன் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்' என, தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான உமாங் சிங்கர், பழங்குடி சமூக தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான, மறைந்த பிர்சா முண்டேயின், 123வது நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசியதாவது:
ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான், கடவுள் ராமரை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். சிலர், இவர்களை வானர சேனை என அழைக்கின்றனர்.
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஆதிவாசி சமூகத்தினர் தான், ராமருக்கு உதவினர். ஹனுமனும் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர் தான். நாங்கள், அவர்களது வழித்தோன்றல்கள்.
அந்த சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையில், இது எனக்கு பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஹிதேஸ் பாஜ்பாதி கூறியதாவது:
உமாங் சிங்கர் போன்ற காங்கிரஸ் கட்சியினர், ஹனுமனை கடவுளாக கருதாமல், அவமதிக்கும் விதமாக செயல்படுகின்றனர். கத்தோலிக்க பாதிரியார்கள் எப்படி பேசுவரோ, அதுபோல் காங்கிரஸ் கட்சியினர் பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.