பொள்ளாச்சி:'வேளாண் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி, பயன்படுத்தப்படாமல் திரும்ப செல்லும் நிலை உள்ளது,' என, தி.மு.க., எம்.பி., வெளிப்படையாக பேசினார்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை மற்றும் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கம், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், சப் - கலெக்டர் பிரியங்கா ஆகியோர் பேசினர்.
பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் பேசியதாவது:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கில், நிர்வாகம், வாய்ப்புகள், அரசுத்துறை மானியம், உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கப்படுகிறது.
முதலில் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை செய்ய வேண்டும். அடுத்ததாக, 'ஜாப் கார்டு' என வரவு, செலவு கணக்குகளை பராமரிக்க வேண்டும். தரமான நாற்றுகள் தயாரித்து வினியோகிக்க வேண்டும்.
மத்திய அரசு, வேளாண்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாததால், வேளாண் துறைக்கு ஒதுக்கும் நிதி, பயன்படுத்தப்படாமல் திரும்ப செல்லும் நிலை உள்ளது.
நன்றாக செயல்படும் நிறுவனங்களுக்கு, பரிசும், மந்தமாக செயல்படும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாற்றி யோசிங்க!
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
ஒரே மாதிரியான பயிர்களை பல ஆண்டுகளாக சாகுபடி செய்வதால் மண் வளம் பாதிக்கப்பட்டு, பல்வேறு விதமான நோய் தாக்குதலால், தென்னை மரங்கள் பாதிக்கப்படுகின்றன. மண் வளத்தை ஆய்வு செய்து அதற்கேற்ப சாகுபடியை மேற்கொள்ள வேண்டும்.
இந்தாண்டு சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. சிறுதானியங்கள் தேவை அதிகம் உள்ளதால், நல்ல விலை கிடைக்கும். இதற்கான, 'பிராண்ட்' பெயர் உருவாக்க வேண்டும்.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற கூட்டாக இணைந்து விவசாயிகள் முயற்சிக்க வேண்டும். அரசு கொடுக்கும் உதவி, நலத்திட்டங்களை பயன்படுத்தி வளர்ச்சி பெற வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தும் போது, மற்றவர்கள் தயாரிப்பை காட்சிப்படுத்துவதால் புதிய சிந்தனைகள் தோன்றும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.