வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு வாயிலாக, ௨௪௫ சிவில் நீதிபதிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில், சிவில் நீதிபதி பணிக்கான இந்தத் தேர்வில், தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்து மூன்று ஆண்டுகளான வழக்கறிஞர்களும் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளது, வருத்தம் அளிக்கிறது. இப்படி பார் கவுன்சிலில் பதிவு செய்ததை மட்டுமே, தேர்வு எழுதுவதற்கான தகுதியாக நிர்ணயித்தால், அதன் வாயிலாக தேர்வு செய்யப்படும் நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களில் வழங்கும் தீர்ப்புகளின் தரம், மிகப்பெரிய கேள்விக்குறியாகி விடும்.
எனவே, 'சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வில் பங்கேற்போர், பார் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதுடன், ஏதாவது ஒரு வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்; அத்துடன், சீனியர்வழக்கறிஞர்களிடம் குறைந்தபட்சம்ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்' என்ற விதிமுறையை உருவாக்க வேண்டும்.
![]()
|
அப்படி இல்லாமல், பார் கவுன்சில் பதிவை மட்டுமே தகுதியாக நிர்ணயித்தால், அவர்களால் சட்டப் புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு சட்டத்தின் அர்த்தத்தையும் புரிந்து, சரியான தீர்ப்பு வழங்க முடியாது; மேலும், சட்ட நுணுக்கங்களை புரிந்து கொள்ளவும், அவர்களால் முடியாது.
ஏனெனில், அண்டை மாநிலங்களில் உள்ள பல சட்டக் கல்லுாரிகளில், வகுப்புகளுக்கு செல்லாமலேயே, பட்டம் வழங்கும் குறுக்கு வழி நடைமுறை அமலில் உள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் வழக்கறிஞர்களிடம் குமாஸ்தாக்களாக வேலை பார்த்த பலரே, தற்போது, வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளனர்.
இவர்களால் நீதிமன்றங்களில் முறையாக வாதாட முடியாது; அதற்கு பதிலாக, வழக்கறிஞர் என்ற பெயரில் காவல் நிலையங்களிலும், கிராமங்களிலும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதே நடந்து வருகிறது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், சிவில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப தேர்வு வைக்கும் போது, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது, நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக தொழில் செய்து இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது; அந்த விதிமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், தேர்வு செய்யப்பட உள்ள சிவில் நீதிபதிகளின் தரம் கேள்விக்குறியாகி விடும்.
கீழமை நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளே, மற்ற மேலாண்மை நீதிமன்றங்களுக்கு முன்னோடியாக இருப்பதால், சிவில் நீதிபதிகள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.எனவே, சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வு விதிமுறைகளில் மாற்றங்களை அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்தப் பிரச்னையை, உயர் நீதிமன்றம் கவனிக்கும் என, நம்புவோம்!