பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும் 15ம் தேதி, கட்சியின் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.,க்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
வரும் 2024ல் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தே.ஜ., கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஒருபுறம் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை களப்பணியில் இறக்கி விடும் வேலைகளையும், பா.ஜ., தலைமை துவக்கியுள்ளது.
இதன்படி, புதுடில்லி தீனதயாள் உபாத்யா சாலையில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலத்தில், பொதுச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நட்டா தலைமையில் நடைபெற்றது.
இதில், அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ், மூத்த தலைவர்கள் அருண்சிங், தருண் சுக், சுனில் பன்சல், கைலாஷ் விஜய் வர்கியா, சி.டி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில், பிரசாரங்களை இன்னும் தீவிரமாக மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தற்போது நாடு முழுதும் நடைபெற்று வரும் பிரசாரங்களில் இருந்து, கிடைக்கும் வரவேற்பு குறித்த தகவல்களும், இந்த ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இவற்றை வைத்து, 2024 லோக்சபா தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, இந்த பிரசாரங்களில் எம்.பி.,க்களையும் களமிறக்கி, மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாட வைப்பது என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இவற்றை செயல்படுத்துவதற்கான திட்டம் பற்றி எம்.பி.,க்களிடம் பேசலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 15ம் தேதி, கட்சியின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரிடமும், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசஉள்ளார்.
புதுடில்லி தலைமை அலுவலகத்திலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, இந்த ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- நமது டில்லி நிருபர் -