''செலவழிச்ச பணத்தை யாரிடம் கேட்கிறதுன்னு தெரியாம முழிக்காரு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறை விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கோவை வடக்கு தாலுகாவுல, போன வாரம் ஜமாபந்தி நடந்துச்சு... மொத்தம் ஏழு நாட்கள் நடத்தி, பொதுமக்களின் மனுக்களுக்கு அதிகாரிகள் தீர்வு கண்டாவ வே...''கடைசி நாள்ல, தடபுடலாக கறி விருந்தோட ஜமாபந்தியை முடிச்சிருக்காவ...
இதுக்கான செலவை, தாலுகாவுக்கு உட்பட்ட, 24 வி.ஏ.ஓ.,க்கள் ஏத்துக்கிறதா, ஆரம்பத்துல
சொல்லியிருக்காவ வே...
''ஆனா, கடைசியில எல்லாரும் நைசா நழுவிட்டாவ... இதனால, இதுக்கு ஏற்பாடு செஞ்ச அதிகாரி, 'ஏழு நாளும் டீ, ஸ்நாக்ஸ் துவங்கி கறி விருந்து வரைக்கும், 1.22 லட்சம் ரூபாய் செலவாயிட்டு... இதை யாரிடம் போய் வசூல் பண்றது'ன்னு சக அதிகாரிகளிடம் புலம்பியிருக்காரு வே...
''இது, கலெக்டர் ஆபீஸ் உயர் அதிகாரிகள் வரை போய், அவரை கூப்பிட்டு, 'இதை எல்லாம் பெரிசுபடுத்தி பேசலாமா'ன்னு கண்டிச்சு அனுப்பியிருக்காவ... பாவம், மனுஷன் நொந்து போய் கிடக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
![]()
|
''ஹரி சார்... ஊர்ல இருந்து எப்ப வந்தேள்...'' என, நண்பரிடம் நலம் விசாரித்த குப்பண்ணாவே, ''குளிரை விரட்ட, நள்ளிரவு வரை பார்களை திறந்து வச்சிருக்கா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார்.
''கண்டிப்பா, மலை மாவட்டமா தான் இருக்கும்... விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டத்துல, 70 டாஸ்மாக் கடைகள் இருக்கு... கடைக்கு பக்கத்துலயே பார்களும் செயல்படறது ஓய்...
''ராத்திரி, 10:00 மணிக்கு கடைகளை மூடிட்டாலும், பார்கள் நள்ளிரவு, 12:00 மணி வரை நடக்கறது... குவார்ட்டர் பாட்டிலுக்கு கூடுதலா, 50 ரூபாய் வச்சு விக்கறா ஓய்...
''இந்த பார்கள் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கப்டாதுன்னு, போலீசாருக்கு உள்ளூர் ஆளுங்கட்சியினர் உத்தரவு போட்டிருக்கா... ஒருவேளை, பொதுமக்கள் தரப்புல இருந்து நிறைய புகார் வந்தா, பேருக்கு ஒரு நாள் மட்டும் ராத்திரி, 10:00 மணிக்கு பாரை மூடிட்டு, மறுநாள் வழக்கம் போல திறந்துடறா... மதுவிலக்கு போலீசார், சும்மா பல் குத்திண்டு உட்கார்ந்திருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அழகிரி பத்தி மேலிடத்துல போட்டு குடுத்துட்டாருங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கர்நாடகாவுல ஐ.ஏ.எஸ்., அதிகாரியா இருந்த, நம்ம காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், வி.ஆர்.எஸ்., குடுத்துட்டு காங்கிரஸ்ல சேர்ந்தாரு... இவர் சமீபத்துல, மணிப்பூர் கலவரம் பத்தி சென்னை சத்தியமூர்த்தி பவன்ல பேட்டி குடுத்தாருங்க...
''இதுல, மாநில தலைவர் அழகிரி வேண்டா வெறுப்பா தான் கலந்துக்கிட்டாரு... அப்ப, தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் ஒரு சால்வையை அழகிரியிடம் கொடுத்து, சசிகாந்த் செந்திலுக்கு போடுங்கன்னு சொன்னாருங்க...
''கோபமான அழகிரி, 'யார் கொண்டு வந்தாங்களோ, அவங்களே போடுங்க'ன்னு முகத்தை திருப்பிக்கிட்டாரு... இது, வீடியோவுலயும் பதிவாகிடுச்சுங்க... இந்த வீடியோவை, டில்லி மேலிட தலைவர்களுக்கு சசிகாந்த் அனுப்பிட்டாருங்க...
''தமிழக காங்., தலைவர் பதவிக்கு சசிகாந்த் செந்தில் பேரும் அடிபடுதுங்க... அதான், அவர் மேல அழகிரிக்கு கடுப்புன்னு பேசிக்கிறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.