வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ''சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சீராக இருந்தால், அடுத்த காலாண்டில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து, எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும்,'' என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார்.
தலைநகர் புதுடில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2022 ஏப்ரலில் இருந்து, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த விவகாரத்தில், நுகர்வோருக்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும். சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை சீராக இருந்தால், அடுத்த காலாண்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து, எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்யும்.
![]()
|
பா.ஜ., அல்லாத மாநில அரசுகள், 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு வரியை குறைக்காமல், பா.ஜ., அரசுகளை விட, அதிக விலைக்கு பெட்ரோல், டீசலை விற்பனை செய்கின்றன.
ஆனால், விலையை குறைக்கும்படி அவர்கள் தான் குரல் கொடுத்து வருகின்றனர்.
வெளிநாடு செல்லும் போது தான், சிறுபான்மையினர் குறித்து ராகுலுக்கு ஞாபகம் வரும். கடந்த ஐ.மு., கூட்டணி ஆட்சியில், சிறுபான்மையினர் அதிகம் துன்புறுத்தப்பட்டனர்.
காங்., ஆட்சியில், உலகளவில், 10வது இடத்தில் இருந்த நம் நாட்டின் பொருளாதாரம், பிரதமர் மோடி ஆட்சியில், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பிரதமர் மோடியால், நம் நாட்டின் பெயர் உலகெங்கும் எதிரொலிக்கிறது. இதை, ஜீரணிக்க முடியாமல், காங்., புழுதி வாரி துாற்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.