அருப்புக்கோட்டை : விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், செந்தில்குமார், கும்பகோணம் அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர் கலா ஆகியோர் தஞ்சாவூர் அருகேபழமை வாய்ந்த முருகன், வீரபத்திரர் உட்பட சிலைகளை கண்டறிந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை - திருவையாறு செல்லும் ரோட்டில் வடகுத்து என்ற கிராமத்தில் வீர அய்யனார் கோயில் உள்ளது. இங்கு சென்று வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பழமையான ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பங்களை கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது :
வடக்குத்து கிராமத்தில் உள்ள வீர அய்யனார் கோயிலில் பல்லவர் கால முருகன், விநாயகர், வீரபத்திரர், தவ்வை, சத்தம் மாதர் தொகுப்பில் உள்ள வராஹி, பிராம்மி, வைஷ்ணவி, மகேஸ்வரி, சாமுண்டி, கௌமாரி, இந்திராணி போன்ற சிற்பங்கள் ஒரே இடத்தில் உள்ளன. இங்குள்ள முருகன் சிற்பம் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் 5 உயரம் கொண்ட பலகை சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
நான்கு கரங்களுடனும், வலது மேற்கரத்தில் வஜ்ராயிதமும், இடது மேற்கரத்தில் சங்கும், வலது முன் கரத்தில் பதாக ஹஸ்தமாகவும், இடது முன் தரம் ஹடிஹஸ்தமாகவும் வைத்தபடி சிற்பம் உள்ளது. தலையில் கரந்த மகுடமும் நெற்றியில் நெற்றி கண் என்ற கன்னி மாலைஇடம் பெற்றுள்ளது. சூர பத்மனை வதம் செய்வதற்கு திருமால் தனது ஆயுதமான சங்கை கொடுத்ததன் அடிப்படையில் ஒரு கையில் வஜ்ராயுதமும், மற்றொரு கையில் சங்கை வைத்தபடி திருமாலும் நானே சுப்பிரமணியரும் நானே என்ற அடிப்படையில் உள்ள இந்தக்கோலம் 7 ம் நூற்றாண்டை சார்ந்ததாகும்.
இதேபோன்று வீரபத்திரர் சிற்பமானது வித்யாசமான கோலத்தில் 3 அடி உயர பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. தலை நீண்ட ஜடா பாரத்துடனும், காதுகளில் காதணியும், கழுத்தில் ஆபரணமும் மார்பில் முப்புரிநூலும் உள்ளது. நான்கு கரங்களுடனும் இடையில் இடைக்கச்சையுடனும், ஒரு காலை தொங்கவிட்டும், மற்றொரு காலை வடக்கில் வைத்தும் ஏகாந்த நிலையில் அமர்ந்தபடி சிற்பம் உள்ளது. இது பல்லவர் காலம் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம், என்றனர்.