வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு பிறகு, ரயில் பயண காப்பீடு குறித்து பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது காப்பீடு பெறுவது தற்போது, 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரயில் பயணத்துக்கு, 82 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணியர் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில் டிக்கெட் முன்பதிவின் போது, அதற்கான காப்பீட்டையும் பயணியர் எடுக்க வேண்டும்.
ரயில் டிக்கெட் பதிவு செய்யும்போது, நீங்கள் பயணக் காப்பீடு எடுக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு'ஆம்' என்று மட்டும், 'க்ளிக்' செய்தால் போதும்.
பயணக் கட்டணத்துடன், காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையாக, 35 பைசா செலுத்த வேண்டும். 2016ம் ஆண்டு முதல் இந்த வசதி இருக்கிறது. ஆனால், பெரும்பாலான பயணியர் காப்பீடு செய்வதை, தவிர்த்து வந்தனர்.
![]()
|
இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் டிக்கெட் முன்பதிவின் போது காப்பீடு வசதி குறித்து தெரியாமலேயே அல்லது கவனக்குறைவாகவே டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். சிலர் தெரிந்தும் காப்பீடு வசதியை,' க்ளிக்' செய்வதில் அலட்சியம் காட்டுகின்றனர்.
ரயில் காப்பீடு திட்டத்தில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும்.
காயமடைந்த பயணிகள், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், இரண்டு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும்.
இதற்கு முன் ரயில் காப்பீடு செய்வது ,40 சதவீதம் வரையில் தான் இருந்தது. ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு, 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.