சென்னை: 'புதிய மொழி படிக்க தடை முதல், தேசிய போட்டிகளில் பங்கேற்கும் உரிமையை மறுப்பது வரை, லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை, தி.மு.க., அரசு நசுக்குகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
டில்லியில் நடக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழகம் சார்பில் அணியை தேர்வு செய்யாமல், பள்ளிக் கல்வி துறை புறக்கணித்தது குறித்து, 5ம் தேதி கேள்வி எழுப்பி இருந்தோம்.
இதுகுறித்து, நினைவூட்டியும் கவலைப்படாமல் இருந்து விட்டு, முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து, தான் இழைத்த தவறை மறைக்க பார்க்கிறார், பள்ளிக் கல்வி துறை அமைச்சர்.
அவரின் பொறுப்பின்மையை மறைக்க, அரசு அதிகாரிகளை பலிகடாவாக்கி, தேசிய போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த மாணவர்களின் கனவுகளை கலைத்திருப்பது நியாயமா? இதற்கு, பள்ளிக் கல்வி துறை அமைச்சரே முழு பொறுப்பேற்க வேண்டும்.
புதிய மொழியை படிக்க தடையாக இருப்பது முதல், தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் உரிமையை மறுப்பது வரை, லட்சக்கணக்கான பின்தங்கிய மாணவர்களின் குரலை, தி.மு.க., அரசு நசுக்குகிறது.
அதே சமயம், தி.மு.க., தலைவர்களின் மகன்கள், மகள்கள், ஆடம்பரமாக வாழ்கின்றனர். அமைச்சர் மகேஷ், தன் அலட்சிய அணுகு முறைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.