வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில், சசிகலா பங்கேற்காதது, பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தினகரன் ஆகியோர் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் மூவரும் ஒன்றிணைந்தால், பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என, அவர்களின் ஆதரவாளர்கள் நம்பினர்.
அதைத் தொடர்ந்து, தினகரனை சந்தித்து, பன்னீர்செல்வம் பேசினார். அதைத் தொடர்ந்து இருவரும், பழனிசாமிக்கு எதிராக இணைந்து செயல்பட முடிவு செய்தனர்.
அவர்களுடன் சசிகலாவும் இணைந்தால், தென் மாவட்டங்களில் கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என, அவரது ஆதரவாளர்கள் நம்பினர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் சண்முகபிரபு திருமணம், தஞ்சாவூரில் நடந்தது. திருமணத்துக்கு வரும்படி தினகரன், சசிகலா ஆகியோருக்கு, வைத்திலிங்கம் அழைப்பு விடுத்தார்.
எனவே, திருமண விழாவில், பன்னீர்செல்வம் - தினகரன் - சசிகலா சந்திப்பு நடக்கும்; இது, இணைந்து செயல்பட வழிவகுக்கும் என, மூன்று தரப்பிலும் நம்பினர்.
ஆனால், திருமணத்திற்கு சசிகலா வரவில்லை. திருமண விழாவுக்கு முன், பழனிசாமி ஆதரவு முன்னாள் அமைச்சர் ஒருவர், சசிகலாவை சந்தித்து பேசியதாகவும், அதன் பின்னரே, அவர் திருமணத்திற்கு செல்வதை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், 'வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் சசிகலா பங்கேற்று, அ.தி.மு.க., நிர்வாகிகள் வீட்டு நிகழ்வுக்கு யார் அழைத்தாலும் வருவேன் என அறிவித்திருந்தால், அவர் மதிப்பு கூடியிருக்கும். ஆனால், அவர் வராமல் போனது, அவருக்கு பின்னடைவே.
'பழனிசாமி தரப்பினர் என்றைக்கும் அவரை ஏற்க மாட்டார்கள். அனைவரும் தன் தலைமையை ஏற்பர் என அவர் நம்பினால், அது இந்த ஜென்மத்தில் நடக்காது' என்றார்.
- நமது நிருபர் -