சென்னை: 'மே மாதம் சம்பளம் வழங்கப்படாது' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருப்பது, பகுதி நேர ஆசிரியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக் கலை, கட்டடக் கலை போன்ற பாடப்பிரிவுகளில், 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில், 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
கடும் அதிர்ச்சி
அவர்களுக்கு பள்ளி நடக்கும் மாதங்களில் மட்டும் சம்பளம் வழங்கப்படும். பள்ளி விடுமுறையான மே மாதம், சம்பளம் வழங்கப்படுவதில்லை.
அவர்கள், தங்களுக்கு மே மாத சம்பளம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
கோரிக்கையை வலியுறுத்தி சமீபத்தில் போராட்டமும் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என, அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டு மே மாதம் சம்பளம், தங்களுக்கு கிடைக்கும் என, பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்.
![]()
|
ஆனால், மே மாதம் சம்பளம் இல்லை என, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் அறிவித்துள்ளது. இது, பகுதி நேர ஆசிரியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாதம் சம்பளம் வழங்கப்படாததற்கு, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம்
இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
'ஒடிசா மாநிலத்தில், 57,000, ராஜஸ்தான் மாநிலத்தில், 1.10 லட்சம் தற்காலிகப் பணியாளர்கள் முறைப்படுத்தப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் இதேபோல் முதல்வர் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.