கடலுார் : மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், மரைன் இன்ஜினியர் கட்டியுள்ள கப்பல் வடிவ வீடு, கடலுார் மாவட்டத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இந்த வீட்டை, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வியந்து செல்கின்றனர்.
கடலுார் மாவட்டம், முதுநகர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் சுபாஷ், 42; சரக்கு கப்பலில், 15 ஆண்டுகளாக பொறியாளராக உள்ளார். இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
கணவர் வேலை செய்யும் கப்பலை பார்க்க சுபஸ்ரீ ஆசைப்பட்டார். சரக்கு கப்பல் என்பதால் மனைவியை அழைத்துச் செல்ல முடியாத நிலையில், கப்பல் போல வீடு கட்டி கொடுப்பதாக சுபாஷ் வாக்குறுதி அளித்தார்.
அதை நிறைவேற்றும் வகையில், கடலுார் வண்ணாரபாளையத்தில், 4,000 சதுர அடி இடம் வாங்கி, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், கப்பல் வடிவமைப்பில் வீடு கட்டியுள்ளார்.
இரு ஆண்டுகளாக பணி நடந்த நிலையில், சமீபத்தில் புதுமனை புகுவிழா நடந்தது. வீட்டின் வெளித்தோற்றம் கப்பல் போன்றே காணப்படுகிறது. தண்ணீரில் கப்பல் இருப்பதைப் போன்று, வீட்டைச் சுற்றி அகழி போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் நுழையும் பகுதி, கப்பலில் நுழைவு வாயில் போன்று அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் கீழ் தளத்தில் ஹால் மட்டுமே உள்ளது.
கப்பலில் மேல் தளத்திற்கு செல்ல ஏணிப்படிகள் அமைத்திருப்பது போன்று மாடிப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் உட்பட தனித்தனியாக ஆறு அறைகள் உள்ளன.
இரண்டாவது தளத்தில் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்துவது போல நான்கு புறமும் கண்ணாடி கதவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகளும் கப்பலில் இருப்பதைப் போன்றே உள்ளன.
குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரின் முதல் எழுத்தால், 'எஸ் 4' என கப்பல் வீட்டிற்கு, சுபாஷ் பெயர் சூட்டியுள்ளார்.
கப்பல் பொறியாளரான சுபாஷ், கப்பல் போன்று வீடு கட்டி அசத்தியுள்ளது கடலுாரில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த வீட்டை ஏராளமான பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்.