திருப்பூர் : ''ஒரு பொய்யை மறைக்க, ஒன்பது பொய் சொல்கிறார் வைகோ,'' என, ம.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கூறினார்.
ம.தி.மு.க., அவைத் தலைவராக இருந்த துரைசாமி, கட்சி பதவியில் இருந்து, மே 30ல் விலகினார். வைகோ மீது பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இதற்கு வைகோ, எதிர் விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், திருப்பூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கக் கூடாது' என, நான் கூறியதாக வைகோ கூறியுள்ளார். தி.மு.க.,வுக்கும், எனக்கும் விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறி வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில், திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகம், என் தலைமையில் தான் திறக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பின், தொகுதி எம்.எல்.ஏ., அச்சடித்த நன்றி அறிவிப்பு நோட்டீசில், என் பெயரை, புகைப்படத்துடன் அச்சிட்டிருந்தார். அப்படியிருக்க தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என, நான் எப்படி சொல்வேன்?
சட்டசபை தேர்தலில், சாத்துார் தொகுதியில், துரை வைகோ போட்டியிட, கட்சி நிர்வாகிகள் விரும்புவதாக, கட்சி துணை பொதுச்செயலர் மல்லை சத்யா என்னிடம் கூறினார்.
கூட்டணியில் ஒதுக்கப்பட்டதே, ஆறு இடங்கள் தான்; அதில், ஒரு தொகுதியில் வைகோ தன் மகனை நிறுத்துவது சரியல்ல; குடும்ப அரசியல் வந்துவிடும் எனக்கூறி, அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
என் எதிர்ப்புக்கு பயந்து தான், சாத்துாரில் துரை வைகோ போட்டியிடவில்லை. தி.மு.க.,வுக்கு எப்போதும் துணையாக இருப்பேன் எனக்கூறி வரும் வைகோ, ம.தி.மு.க.,வை அக்கட்சியுடன் இணைத்து விடலாம்.
தொழிற்சங்கம் வேறு; அரசியல் அமைப்பு வேறு. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தொழிற்சங்கத்தில் பொறுப்பில் இருக்கலாம். ஆனால், அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சி, அந்த தொழிற்சங்கத்தை கட்டுப்படுத்தாது.
அந்த வகையில், கோவை மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம், கட்சி சார்ந்தது அல்ல. கடந்த 2010க்கு பின், வைகோவின் பேச்சாற்றல், திறமை எதுவும் எடுபடவில்லை.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். ஒரு பொய்யை மறைக்க, ஒன்பது பொய் சொல்கிறார்.
இவ்வாறு துரைசாமி கூறினார்.
துரைசாமி கூறுகையில், ''நான் தி.மு.க.,வில் இருந்த போது, கருணாநிதியுடன் மிக நெருக்கமாக இருந்தேன். கருணாநிதி, 1966 மே மாதம், திருப்பூரில், 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன், அவரது காரில் நான் தான் பயணித்தேன். அவருக்கு தேவையான உதவிகளை செய்தேன்.''கோவையில் நடந்த நிறைவு நாள் கூட்டத்தில் கருணாநிதி பேசும் போது, அவரது மனைவி எப்படி அவரை பார்த்துக் கொள்வாரோ, அதே போன்று, நான் அவரை கனிவுடன் கவனித்துக் கொண்டதாக பேசினார். அவரது கடைசி காலம் வரை, அதுபோன்று அவர் யாரையும் ஒப்பிட்டு பேசியதில்லை,''என்றார்.