சென்னை : முக்கிய நிர்வாகிகளுடன், பா.ஜ., மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதால், மத்திய அமைச்சரவையிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு கிடைத்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள எதிர்க்கட்சிகள், பா.ஜ.,வுக்கு எதிராக கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
பெரும் சிக்கல்கள்
வரும், 23ல் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடக்க உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில், குறைந்தது இரண்டு மாநிலங்களிலாவது ஆட்சியை பிடிக்காவிட்டால், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதிலும், கூட்டணி அமைப்பதிலும் பெரும் சிக்கல்களை, பா.ஜ., சந்திக்க வேண்டிஇருக்கும்.
![]()
|
இப்போது, பா.ஜ., தேசிய நிர்வாகிகளாக இருப்பவர்களில் பலரது செயல்பாடுகளில், பிரதமர் மோடிக்கு திருப்தி இல்லை எனக் கூறப்படுகிறது.
மாநிலங்களில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பலர் மீது, அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர்.
அனுபவம் வாய்ந்த பலர், வயது காரணமாக, கட்சி பணிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாலும், மத்திய அமைச்சர்களாக இருப்பதாலும், கட்சி பணிகள், தேர்தல் வியூகம் வகுப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை சரி செய்ய, மத்திய அமைச்சர்களில் சிலரை, கட்சி பணிக்கு அனுப்ப, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது:
கர்நாடகா சட்டசபை தேர்தலில் கிடைத்த படிப்பினையால், கட்சிக்குள் பல மாற்றங்களை செய்ய, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
கட்சிக்குள் என்னென்ன பிரச்னைகள் உள்ளன; அதை சரிசெய்ய என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்து, நிர்வாகிகளிடம் விரிவாக ஆலோசனை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு, தேசிய தலைவர் நட்டாவிடம், மோடி கூறியுள்ளார்.
ஆலோசனை
அதைத் தொடர்ந்து, நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ், தேசிய பொதுச் செயலர் சுனில் பன்சால் ஆகியோர், தேசிய நிர்வாகிகள், அணிகளின் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள், மாநில அமைப்பு பொதுச் செயலர்களுடன், பல கட்டங்களாக ஆலோசனை நடத்திவருகின்றனர்.
அதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவையிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.