வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
விரைவில் நடக்கவுள்ள சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற, பா.ஜ.,வுக்கு போட்டியாக ஹிந்துத்வா ஆதரவு நிலையை கையில் எடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.
சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும், ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சியும் நடக்கின்றன.
காங்கிரஸ் மேலிடம் வழக்கமாக சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்காக, அவர்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பது வழக்கம்.
பல்வேறு பிரச்னைகளில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசும் காங்., தலைவர்கள், பெரும்பான்மை சமூகமான ஹிந்துக்களுக்கு முக்கியம் தருவது இல்லை. நீண்ட காலமாக இந்த கொள்கையைத் தான் காங்கிரஸ் பின்பற்றி வருகிறது.
![]()
|
இது குறித்து, பா.ஜ., தலைவர்கள் வெளிப்படையாகவே காங்கிரசை விமர்சித்து வருகின்றனர்.
இதனால், பெரும்பான்மை ஹிந்துக்களின் ஓட்டுகளை பெற முடியாமல் காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதையடுத்து, தேர்தல் நடக்கவுள்ள இந்த இரு மாநிலங்களிலும் வியூகத்தை மாற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கரில் கடந்த நான்கு ஆண்டுகளாகவே முதல்வர் பூபேஷ் பாகேல், ஹிந்துக்களின் ஓட்டுகளை குறிவைத்து செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ராமாயணத்தில், அயோத்தியிலிருந்து இலங்கைக்கு ராமர் பயணித்ததாக நம்பப்படும் வழித்தடங்களை ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் மட்டும் 51 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, ஆன்மிக சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
மேலும், 'தேசிய ராமாயண திருவிழா' என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவு, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோலோ நதிக்கரையில் மூன்று நாட்களுக்கு, 'ஹனுமன் சாலிசா' சொல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ராமாயண திருவிழாவுக்காக, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பசு பராமரிப்புக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பழமையான கோவில்களை புனரமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது.
தேர்தல் பிரசாரத்தின் போது இந்த திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறும்படி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ள பாகேல், இதன் வாயிலாக பா.ஜ.,வின் குற்றச்சாட்டுகளை முறியடிக்க முடியும் என நம்புகிறார்.
மத்திய பிரதேசம்
ம.பி.,யில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், ஹிந்துக்களின் ஓட்டு களை வளைப்பதற்கான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக இறங்கிஉள்ளார்.
பஜ்ரங் சேனா என்ற ஹிந்து அமைப்பை காங்., கூட்டணியில் சேர்த்து, அந்த அமைப்பிற்கு சில தொகுதிகளை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த அமைப்பு ஆன்மிக தலங்களை மேம்படுத்துவது, பசுக்களை பராமரிப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த 10 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக, கமல்நாத் உறுதி அளித்துள்ளார்.
ம.பி.,யில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டு, 14 சதவீதம் உள்ளது.
இந்த ஓட்டுகளை பெறுவதற்காக, அந்த சமூகத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோஷியின் மகனுமான தீபக் ஜோஷியை காங்கிரசில் சேர்த்துள்ள கமல்நாத், அவருக்கு முக்கிய பதவியை கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கைகளிலும் ஹிந்துக்களுக்கு ஆதரவான பல அம்சங்களை இடம் பெற வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும், தன்னை ஹனுமன் பக்தர் என்றும் அவர் அடிக்கடி கூறி வருகிறார்.
இந்த இரண்டு மாநிலங்களிலும் ஹிந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க காங்., முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் மேலிட தலைவர்களின் சம்மதத்தைக் கூட எதிர்பார்க்காமல், இரண்டு மாநிலங்களின் உள்ளூர் தலைவர்களே இந்த அதிரடி வியூகத்தை வகுத்துள்ளது, பா.ஜ., வையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -