புதுடில்லி : ஹெலிகாப்டர் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனமான, 'பவன் ஹான்ஸ்' நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை, 'ஸ்டார் 9 மொபிலிட்டி' எனும் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் திட்டத்தை, மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பவன் ஹான்ஸ் நிறுவனம், அரசு மற்றும் ஓ.என்.ஜி.சி., ஆகியவற்றின் 51:49 விகிதத்திலான கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டதாகும்.
பவன் ஹான்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகள் மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டு உரிமை ஆகியவற்றை, ஸ்டார் 9 மொபிலிட்டி நிறுவனத்துக்கு, 211.14 கோடி ரூபாய்க்கு மாற்ற, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு ஒப்புதல் அளித்து இருந்தது.
இந்நிலையில், தற்போது, அந்நிறுவனத்தின் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு, விற்பனை முயற்சியை கைவிடும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டார் 9 மொபிலிட்டி நிறுவனத்திற்கு எதிராக, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மற்றும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவற்றின், பாதகமான உத்தரவுகளை அரசாங்கம் ஆய்வு செய்து, இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.