குழுவாக ஒரு உல்லாச சுற்றுலா அல்லது திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு பெரிய பரிவாரங்களுடன் செல்ல வேண்டும் என்றால் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வது சவாலானது. அதிர்ஷ்டவசமாக, இந்திய ரயில்வே இதற்கென ஒரு சேவையை வைத்துள்ளது. முழு ரயிலை அல்லது முழு கோச்சை முன்பதிவு செய்யலாம்.
இந்தச் சேவையை அணுக, முதலில் https://www.ftr.irctc.co.in/ftr என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சிறப்பு பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். வெற்றிகரமாக உள்நுழைந்ததும், ஒரு கோச் அல்லது முழு ரயில் அல்லது சலூன் சார்ட்டர் எனும் சொகுசு கோச் முன்பதிவு செய்வதற்கான சாய்ஸ்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
![]()
|
உங்கள் தேவைகளின் அடிப்படையில் ஒரு கோச் அல்லது முழு ரயிலையும் முன்பதிவு செய்யலாம். பின்னர் பயண தேதி மற்றும் கோச் வகை போன்ற கூடுதல் விவரங்களை வழங்க வேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி., தளத்திலேயே கட்டணத்தையும் செலுத்த முடியும். அதற்கென பேமென்ட் கேட்வே உள்ளது.
ஒரு முழு ரயில் அல்லது ஒரு பெட்டியை முன்பதிவு செய்வதற்கு முன், அது தொடர்பான முக்கியமான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நன்கு அறிந்துகொள்ளுங்கள். ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஏசி, மூன்றாம் வகுப்பு ஏசி 3, ஏசி சேர் கார் மற்றும் ஸ்லீப்பர் உட்பட எந்த வகை கோச்சையும் முன்பதிவு செய்யலாம். குறைந்தபட்சம் 500 கி.மீ., தூர பயணத்திற்கு மட்டுமே முன்பதிவு அனுமதிக்கப்படும்.
ஒரு பெட்டிக்கான பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.50,000. 18 கோச் கொண்ட முழு ரயிலையும் முன்பதிவு செய்கையில் ரூ.9 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இவை தவிர எந்த கோச்சோ அந்த கோச்சில் ஒரு பயணிக்கு என்ன கட்டணமோ அது வசூலிக்கப்படும். அறிவிப்பின்றி கூடுதல் பயணிகளை ஏற்றினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் 20% சேவை வரி உண்டு.
பயணத்திற்கு 30 நாட்கள் முதல் 6 மாதங்கள் முன்னதாக முன்பதிவு செய்யலாம். பயணம் ஒத்திவைக்கப்பட்டால் ஒரு முறை தேதியை மாற்றிக்கொள்ள அனுமதி உண்டு. அதனை 10 நாட்கள் முன்னதாக தெரிவிக்க வேண்டும். முன்பதிவை ரத்தும் செய்யலாம். நீங்கள் மொத்த கட்டணத்தில் 30 முதல் 35 சதவிகிதம் கூடுதலாகச் செலுத்த வேண்டும். பயணத்திற்குப் பிறகு பாதுகாப்பு வைப்புத் தொகை திருப்பிச் செலுத்தப்படும்.
![]()
|
கடந்த ஆண்டு இறுதியில் முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்கு இது போன்ற சலூன் கோச்சை புக் செய்து பயணித்தார். அவை வீட்டில் இருப்பது போன்றே உணர வைக்கும். சோபா, டிவி, மாஸ்டர் பெட்ரூமை கொண்டது. அதே போல் இப்போது அதிமுக., பொன்விழா மாநாட்டிற்கு முழு ரயிலையே புக் செய்து சென்னையிலிருந்து தொண்டர்களை அழைத்துச் சென்றனர்.
முழு ரயிலை நேரடியாக முன்பதிவு செய்ய வேண்டுமெனில்
பயணிகள் போக்குவரத்து தலைமை மேலாளர்,
தெற்கு ரயில்வே,
சென்னை.
கோச் எனும் பெட்டியை முன்பதிவு செய்ய மண்டல அளவிலான இயக்க மேலாளரை தொடர்புகொள்ளலாம்.