புதுடில்லி ; மத்திய அரசின், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கும், அது பற்றி ஆராய குழு நியமிக்கப்பட்டு உள்ளதற்கும், காங்கிரஸ் எம்.பி., ராகுலும், முதல்வர் ஸ்டாலினும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். 'ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தும் முயற்சி, அனைத்து மாநிலங்கள் மீதான தாக்குதல்' என, ராகுலும்; 'அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரும் திட்டம்' என, முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்துள்ளனர்.
லோக்சபா மற்றும்மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய அரசு குழுவைநியமித்துள்ளது.
இந்தக் குழுவில், மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பெயர், இந்தக் குழுவில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் இணைய மறுத்து விட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பல்வேறு மாநிலங்கள் ஒருங்கிணைந்தது தான் இந்தியா.
'அப்படி இருக்கையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதன் வாயிலாக இந்தியா மற்றும் அனைத்து மாநிலங்கள் மீது, மத்திய அரசு தாக்குதல் நடத்தி உள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, சென்னை திருவொற்றியூரில் நடந்த, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன் இல்ல திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாட்டை காப்பாற்ற வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. யார் பிரதமராக வேண்டும்; யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது முக்கியமல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான், நம் லட்சியமாகவும், நோக்கமாகவும் இருக்க வேண்டும்.
'இந்தியா' என்று உருவாக்கியுள்ள கூட்டணியை பார்த்து, பா.ஜ., அஞ்சி நடுங்கி, திடீரென பார்லிமென்ட் கூட்டத்தொடரை நடத்துவதாக அறிவித்து உள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த இந்த ஏற்பாடு. இதற்காக ஒரு குழுவையும் அமைத்துள்ளனர். அந்த குழுவிற்கு, நாட்டின் முன்னாள் ஜனாதிபதியைநியமித்துள்ளனர்.
ஜனாதிபதி என்பவர் பொதுவானவர். அவர் பதவியில் இருந்து விலகினாலும், அரசியலுக்கு வரக்கூடாது; அரசியல் தொடர்புடைய எந்த பிரச்னையிலும் தலையிடுவது நியாயம் கிடையாது; அது தான் மரபு. அதை எல்லாம் இன்றைக்கு கொச்சைப்படுத்தி, இவர்கள் சொல்வதை அவர் கேட்பார் என்பதற்காக, குழுவின் தலைவராக நியமித்து, சில உறுப்பினர்களையும் அதில் சேர்த்துள்ளனர்.
அனைத்து கட்சிகளையும் கலந்து பேசி, குழு உறுப்பினர்களை நியமிக்கவில்லை. லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தி.மு.க.,வுக்கும் குழுவில் இடமில்லை. தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலரை குழுவில் போட்டு, நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற சர்வாதிகாரத்தோடு, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை, ஆளுங்கட்சியாக இருந்த போது எதிர்த்த அ.தி.மு.க., இப்போது தி.மு.க., ஆட்சி நடப்பதால் ஆதரிக்கிறது. இதனால், அ.தி.மு.க., தான் பலிகடாவாகும். இந்தச் சட்டம் நிறைவேறினால், தி.மு.க., மட்டுமல்ல; எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. நாடு, 'ஒன் மேன் ஷோ' ஆகி விடும். ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதற்கு பதிலாக, அதிபர் என்று அவரே அறிவித்து விடலாம்.
ஒரே நேரத்தில் தேர்தல் வைக்க போகிறோம் என்று சொல்கின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது; இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. அப்படியானால், இந்த ஆட்சியை கலைத்து விடுவீர்களா?
கேரளா, மேற்கு வங்கத்தில் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியின் பதவிக்காலம் உள்ளது. அங்கும் ஆட்சியை கலைப்பீர்களா? சில மாதங்களுக்கு முன் நடந்த கர்நாடக தேர்தலில், பா.ஜ., படுதோல்வி அடைந்தது. அங்கு, காங்., ஆட்சி அமைத்துள்ளது. எனவே, அந்த ஆட்சியையும் கலைத்து விடுவீர்களா?
இப்படி ஒரு சதித் திட்டத்தை தீட்டி, ஒருவரை அதிபராக்க வேண்டும் என்பதற்காக, இன்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நாட்டை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. தேர்தல் செலவை மிச்சப்படுத்த வேண்டும்; குறைக்க வேண்டும் என்று காரணம் சொல்கின்றனர்.தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ, இல்லையோ; கொள்ளை அடிப்பதை முதலில் குறையுங்கள். சி.ஏ.ஜி., அறிக்கை குறித்து இதுவரை பதில் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். இப்படிப்பட்ட கொடுமையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.