வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வழக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் விரைந்து விசாரித்து முடிவெடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் இனி விசாரிக்காது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14ல், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு ஆவணங்களை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை
இதையடுத்து, ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், 'இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், மேற்கொண்டு விசாரணை தேவையில்லை. அறுவை சிகிச்சைக்கு பின்னும், சில உபாதைகள் இருப்பதால், மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியுள்ளது' என, கூறப்பட்டது.
ஜாமின் மனு, சிறப்பு நீதிபதி ரவி முன் விசாரணைக்கு வந்தது.
'சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றமாக, இந்த நீதிமன்றத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பதால், முதன்மை செஷன்ஸ் நீதிபதி முன் தான், ஜாமின் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, ஜாமின் மனுவை, நீதிபதி திருப்பி அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினர்.
'எம்.எல்.ஏ.,வாக செந்தில் பாலாஜி இருப்பதால், எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கின் ஆவணங்கள் மாற்றப்பட்டு விட்டன. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்' என, முதன்மை செஷன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமின் மனு ஆவணங்களை திருப்பி அனுப்பினார்.
மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் அணுகினார். அதை, சிறப்பு நீதிபதி ஏற்காமல், மனுவை திருப்பி அளித்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமின் மனுவை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் அல்லது சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிடும்படி கோரப்பட்டது.
ஆஜர்
இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் பரணிகுமார்; அமலாக்கத் துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகினர்.
'மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையின்படி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றமாக, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளது' எனவழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வு பிறப்பித்த உத்தரவு:
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு, முதலாவதாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து, 2019ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பின், கூடுதலாக இரண்டு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
மூன்று சிறப்பு நீதிமன்றங்களில், முதலாவது சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றி, முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க, சில நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை உள்ளிட்ட, 19 மாவட்டங்களில் இருந்து வரும் வழக்குகளை விசாரிக்க, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில், ஐந்து சிறப்பு நீதிமன்றங்களுக்கும், மதுரையில், இரண்டு சிறப்பு நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான குற்றத்துக்காக, செந்தில் பாலாஜிக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக தொடரப்பட்ட வழக்கை, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களால் மட்டுமே விசாரிக்க முடியும்.
இந்த சட்டத்தின் கீழ், சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்க, மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து, சிறப்பு நீதிமன்றங்களை அறிவித்து, 2016ல் மத்திய அரசு அறிவிப்பாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு, அதிகாரவரம்பு உள்ளது. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, இந்த வழக்கின் ஆவணங்களை மாற்றியது, மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையின்படி இல்லை.
எனவே, மனுதாரரின் ஜாமின் மனுவை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தான் விசாரித்து, பைசல் செய்ய வேண்டும்.
வழக்கு ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்துக்கு ஏற்கனவே மாற்றி விட்டதால், அந்த உத்தரவை வாபஸ் பெற்று, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கே மீண்டும் மாற்ற வேண்டும். ஜாமின் மனுவை திருப்பி அனுப்பிய, முதன்மை செஷன்ஸ் நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
ஜாமின் மனுவுக்கு எண் வழங்கி, இரு தரப்பையும் விசாரித்து, விரைவில் முடிவு செய்ய, முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற உத்தரவால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் அல்லது சென்னையில் உள்ள ஐந்து சிறப்பு நீதிமன்றங்களில், ஏதாவது ஒரு நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிகிறது.