கும்பகோணம்: கும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம்இன்று (7ம் தேதி) தொடங்குகிறது.கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகளின் மடம் அமைந்துள்ளது. மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட வேதாந்த மதமான த்வைத மத குருமார்களில் ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்றுணர்ந்தவருமான விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள் கோவில் நகரம் பாஸ்கர சேத்திரம் எனப்படும் காவேரி நதிக்கரை ஓரத்தில் பிருந்தாவனம் கொண்டுள்ளார்.
மந்திராலயம் ராகவேந்திர சுவாமிகளின் குருவாக திகழ்கிறார்.வியாழன் தோறும் ராகவேந்திர சுவாமிகள் மந்திராலயத்தில் இருந்து இங்கு வந்து தனது பரமகுருவான விஜயீந்திர சுவாமிகளிடம் ஆசி வாங்கிச் செல்வதாக ஐதீகம். அதனால், வியாழன்று இங்கு பக்தர்கள் இரண்டு சுவாமிகளையும் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதால் அதிகமாக வந்து செல்கின்றனர்.இவ்வாறு சிறப்புகள் பெற்ற விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகளின் ஆராதன மகோத்சவ விழா இன்று (7ம் தேதி) பூர்வாராதனையுடன் தொடங்குகிறது. நாளை 8ம் தேதி ஏகாதசியும், மிக முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் தேதி மத்ய ஆராதன வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
பத்தாம் தேதி உத்தர ஆராதனை நடக்கிறது. இதை முன்னிட்டு பத்தாம் தேதி காலை ஏழு மணியளவில் விஜயீந்திர சுவாமிகளின் திருவுருவ சிலை பட்டணபிரவேசமாக வீதியுலா நடக்கிறது. அன்று மாலை ஆறு மணிக்கு மடத்தில் உள்ள கஷ்யப்பத் தீர்த்தகுளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.ஆராதனை விழாவில் பங்கேற்பதற்காக மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் பீடாதிபதி ஆயிரத்து எட்டு சுயதீந்திர தீர்த்தசுவாமிகள் கும்பகோணத்துக்கு வருகை தந்து தினமும் காலை லஷ்மிநாராயணர், விஜயீந்திரர் மூலபிருந்தாவனம், ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனம், மூலராமர்பூஜை ஆகியவைகளை சுவாமிகள் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
ஆராதனை விழாவை முன்னிட்டு தினமும் அதிகாலை விசுவரூப தரிசனம், நிர்மால்ய தரிசனம், காலை அபிஷேக, அலங்கார, தீப ஆராதனைகள், வேதகோஷங்கள் முழுங்க தாஸரூப் பக்திப்பாடல்கள் பாடப்பெற்று அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.தினமும் காலை, இரவு பிரபல வித்வான்களின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், புரந்தரதாசர் கீர்த்தனைகளை விஜயீந்திர பஜனை மண்டலியினர் பாடுகின்றனர். மேலும், வேத வல்லுனர்களின் உபன்யாசங்களும் நடக்கிறது. தமிழகம், டில்லி, மும்பை, கர்நாடகா, ஆந்திரா உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள்.
ஆண்டுதோறும் ஆராதனை விழாவின்போது கும்பகோணம் பகுதியில் உள்ள வேத வல்லுனர்கள், மகாவித்வான்கள் மற்றும் பல துறையைச் சார்ந்தவர்களுக்கும், சாதனையாளர்கள் ஆகியோர்களை கவுரவித்து சன்மானம் வழங்குவதுபோல் இவ்வாண்டும் அதேபோல் வழங்கப்பட உள்ளது.ஏற்பாடுகளை மடத்தின் மேலாளர் பாஸ்கர், செயலாளர் ராஜா.ராஜகோபாலச்சார், கூடுதல் செயலாளர் சுயமேந்திராச்சார் மற்றும் ஆனந்தராவ், உமர்ஜி.மாதவன், ரவி, ரமணி, குரு, குருபிரசாத் ஆச்சார், பத்மநாப ஆச்சார், விஜயேந்திரன், விஷ்ணுபாலாஜி மற்றும் மடத்து நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE