மணி
கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்.உடுமலை சுற்றுச் சூழல் சங்க தலைவர். தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகபணியாற்றி ஓய்வு பெற்றவர். மாணவர்களிடம்
சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர்.
வணிக ரீதியாக உலகம் விரிவடைந்து வரும் இன்றைய சூழலில், மனிதர்களின் ஆடம்பரத் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், இயற்கை தன்மை பாதிக்கப்பட்டு காடுகள் சிறிது சிறிதாக அழிவை நோக்கிய பாதையில் உள்ளது.
மனித - விலங்கு மோதல், மரங்களின் அழிவு இவை அனைத்துமே உயிர் சூழலையும் பாதிக்கிறது.
இயற்கை அழிவை நோக்கி நகர்வதை தடுப்பதற்கு, இளம் தலைமுறையினரும், பள்ளி குழந்தைகளும் தான் பொறுப்பேற்று விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த பொறுப்பை நாம் அவர்களுக்கு கற்றுத்தருவதை விடவும், அவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதற்கான வழியை காட்ட வேண்டும்.
கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள், துாய்மையான காற்று மற்றும் பசுமை மட்டுமே இயற்கை என்பதை கடந்து, நாம் வாழும் பகுதியில் இருக்கும், இயற்கையின் இன்றியமையாமையை மாணவர்களுக்கு புகட்ட வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை என்பது வெறும் மலைத்தொடராகவும், கண்டு ரசிப்பதற்கான சுற்றுலா இடமாகவும் மட்டும் அல்ல; பல்லுயிரினங்களின் வாழ்விடம். இந்த மலைதொடரின் முக்கியத்துவத்தை, குழந்தைகளுக்கு களப்பயணத்தின் வழியாக கற்பிக்க வேண்டும்.
பல்லுயிர் பெருக்கம் அதிகம்
இந்திய துணைக்கண்டத்தில், முக்கிய சிறப்புள்ள மலைகள் என்பதில், ஒன்று மேற்கு தொடர்ச்சி மலை, மற்றொன்று கிழக்கு தொடர்ச்சி மலை.
கிழக்கு தொடர்ச்சி மலை மகாநதியில் துவங்கி, வைகை வரை பரவியுள்ளது. இந்த மலை தொடர், தொடர்ச்சியாக இல்லாமல் ஜவ்வாது, கொல்லிமலை, பச்சைமலை, கல்வராயன்மலை, அழகர்மலை என 98 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பு கொண்டது.
ஆனால், மேற்குதொடர்ச்சி மலை பாலக்காட்டு கணவாய் தவிர, மற்ற இடங்களில் தொடர்ச்சியாக குஜராத்தில் துவங்கி, குமரி வரை, 1,600 கி.மீ., நீளமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவும் கொண்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, சுற்றியுள்ள நீலகிரி, முதுமலை, வயநாடு, பந்திப்பூர், முக்குருத்தி, சைலன்ட்வேலி, பழநி, ஆனைமலை, நாகர்கோவில் என சில பகுதிகள், இந்த மலைகளின் அடையாளப்பெயர்களாகவும் இருக்கின்றன.
2012ம் ஆண்டு உலகின் பாரம்பரியம் மிக்க இடமாக, யுனஸ்கோ அறிவித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்லுயிர்ப்பெருக்கம் அதிகம் உள்ளது.
பெரும் உயிர்ச்சூழல்
இந்த மலைத்தொடரில் மாறுபட்ட தட்பவெப்பம் நிலவுவதால், இதில் முட்புதர் காடுகள், பசுமைமாறாக்காடுகள், சோலைக்காடுகள், புல்வெளி என பல்வகை காடுகளையும், பலவிதமான விலங்குகள், பூச்சிகள், பறவைகள், தாவரங்களும் உள்ளன.
தவளை இனங்கள், தட்டான், மீன், நத்தை என, 1,146 வகையான நன்னீர் வாழ் உயிரினங்கள், 7,402 வகையான பூக்கும் தாவரங்கள், 1,814 வகையான பூவாத தாவரங்கள், பூஞ்சைகள் என மிகப்பெரிய உயிர்ச்சூழல் இங்கு உள்ளது.
தற்போது சிங்கவால் குரங்குகள், வரையாடுகள், இருவாச்சி பறவை உள்ளிட்ட பலவகையான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. கிராமங்களில் மழைகாலம் துவங்கியதுமே, காணப்படும் தவளைகள் இப்போது, அரிதாகிவிட்டது. வீடுகளையும், தோட்டங்களையும் சுற்றிவரும் ஆள்காட்டி குருவிகளும் காணப்படுவதில்லை.
ஆற்றங்கரைகளில் சுற்றிவரும் கழுதைகளை, இப்போது குழந்தைகளுக்கு அரிய விலங்காக அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு நாம் வாழும் சூழலில், நம்முடன் பயணித்த நீர்வாழ், நிலவாழ் உயிரினங்களும் அழிந்துவருவது எதிர்காலத்தின் நிலையை இப்போதே எச்சரிக்கிறது.
கட்டுப்பாடுகள் தேவை
இன்றைய சூழலில், பலரும் நகர வாழ்க்கையால் ஏற்படும் அழுத்தத்தை குறைத்துக்கொள்ள, ஒரு இடைவெளியை தேடி, 'ட்ரக்கிங்' என்ற பெயரில் காடுகளுக்கும் மலைத்தொடர்களுக்கும் செல்கின்றனர். ட்ரக்கிங் செல்வதில் தவறில்லை. ஆனால் இயற்கையை ரசிக்கச்செல்வோர் எதையும் அங்கு விட்டுவரவும் கூடாது; அங்கிருந்து எதையும் எடுத்துவரவும் கூடாது.
மலைத்தொடர்களில் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை வீசி வருவது, விலங்குகளை வேட்டையாடுவது, உணவுகளை வழங்குவது, விலங்குகளை சீண்டுவது போன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
விலங்குகளின் வாழ்விடங்கள் மனிதர்களால் தொந்தரவு செய்யப்படுவதால்தான், விலங்குகள் மனிதர்களின் இருப்பிடத்தை நோக்கி நகர்கின்றன. தற்போது காட்டிற்குள் இருக்கும் குரங்குகளும், யானைகளும், அடிக்கடி குடியிருப்புகளுக்குள் வருவது நடக்கிறது.
மலை மற்றும் காடுகளின் நடுவே உள்ள கோவில்கள், சுற்றுலா தலங்களில்தான் அதிகமான கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பயணிகளிடம் சோதனை செய்யப்படுகிறது. ஆனால், அங்கு இருக்கும் விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் மூட்டைகளை பயன்படுத்துகின்றனர்.
சுற்றுலா பயணியராக செல்வோர், செருப்புகளை அங்கேயே விட்டு வருவது, பிளாஸ்டிக் குப்பைகளை போடுவது என பொறுப்பில்லாமல் நடந்துகொள்கின்றனர்.
குழந்தைகளுக்கு நாம் வாழும் சூழலை பாதுகாப்பதற்கான கடமையை கற்றுகொடுப்பதும் அவசியம். அதற்கு களபயணம் செல்வதும், சுற்றுச்சூழல் பாடத்தை வெறும் புத்தகத்தோடு நிறுத்திவிடாமல் செயல்பாடாகவும் மாற்றுவதும்தான் சிறந்த வழி.
கானகத்தை காப்பது, கற்றலின் ஒரு அங்கமாக மாற வேண்டும்.