சென்னை : சனாதன தர்மத்திற்கு எதிராக, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சுக்கு, பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், 'விபரம் இல்லாமல் பேசுவதா?' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மகனின் கருத்துக்கு ஆதரவாக, நீண்ட விளக்கம் அளித்துள்ள முதல்வரின் நான்கு பக்க அறிக்கையை, 'அரசு செய்திக் குறிப்பு எண் 046' என வரிசையிட்டு, செய்தித் துறை வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், 'சனாதன எதிர்ப்பு மாநாடு' நடந்தது. இதில் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்த சில கருத்துக்களை தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண் இனத்திற்கு எதிரான, சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினார். எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.
ஆன்மிக மேடை
பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும், பெண்ணடிமைத் தனத்தையும் நியாயப்படுத்தும் பழைமைவாத வர்ணாஸ்ரம, மனுவாத, சனாதன சிந்தனைகளுக்கு எதிராக, ஈ.வெ.ராமசாமி, அம்பேத்கர், ஜோதிபாபூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர், குரல் கொடுத்துள்ளனர்.
நிலவுக்கு சந்திரயான் விடும் இந்தக் காலத்திலும், ஜாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாஸ்ரம கருத்துக்களை சொல்லி, பாகுபாடுகளை வலியுறுத்தியும், சில பழைய நுால்களை மேற்கோள் காட்டியும், சிலர் பிரசாரம் செய்து வரத்தான் செய்கின்றனர்.
குழந்தை திருமணத்தை ஆதரித்து, மாநிலத்தின் கவர்னரே பேசுகிறார். குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை போடுகிறார். 'நானே குழந்தை திருமணம் செய்து கொண்டவன் தான்' என்றும், அந்த எண்ணங்களை நியாயப்படுத்தி பேசி வருகிறார்.
பெண்களை இழிவுப்படுத்தியும், அவர்கள் வேலைக்கு போகக் கூடாது; கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், சிலர் ஆன்மிக மேடைகளில் பேசி வருகின்றனர். பெண் இனத்தை சனாதனம் என்ற சொல்லை வைத்து தான், அடிமைப்படுத்த நினைக்கின்றனர்.
இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத் தான், உதயநிதி பேசினார். இத்தகைய கொள்கைகளை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்றார்.
இதை தாங்கிக் கொள்ள முடியாத, பா.ஜ., ஆதரவு சக்திகள், 'சனாதன எண்ணம் கொண்டவர்களை, இனப்படுகொலை செய்ய சொன்னார் உதயநிதி' என்ற பொய்யை பரப்பினர். இனப் படுகொலை என்ற சொல்லை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ, அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை.
பொய்யர்கள்தான் இதை பரப்புகின்றனர் என்றால், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., முதல்வர்கள், உதயநிதி என்ன பேசினார் என்பதை தெரிந்து, கருத்து சொல்லி இருக்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், அந்த பொய் செய்தியை பரப்பி, உதயநிதியை கண்டித்து உள்ளனர்.
'நான் அப்படி பேசவில்லை' என, உதயநிதி தெரிவித்த பிறகாவது, மத்திய அமைச்சர்கள் தங்கள் பேச்சுகளை மாற்றி இருக்க வேண்டும்; அப்படி செய்யவில்லை.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆன்மிகவாதி ஒருவர், அமைச்சர் உதயநிதி படத்தை எரித்து, தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். அவர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல், உதயநிதி மீது வழக்கு போட்டுள்ளனர்.
இந்நிலையில், சனாதனம் குறித்து தவறாகப் பேசினால், உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் பேசியதாக, தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பதை அறிந்து கொள்ளும் அனைத்து வசதிகளும், பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றை சொன்னதாக பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?
நாட்டு மக்களுக்கு கொடுத்த, எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பிரதமர், இப்போது மக்களை திசை திருப்பி, சனாதனப் போர்வையை போர்த்தி, குளிர்காய நினைப்பதாகவே தெரிகிறது.
மணிப்பூர் குறித்தோ, சி.ஏ.ஜி., அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள, 7.50 லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் குறித்தோ, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், இன்னும் வாயே திறக்கவில்லை.
பூச்சாண்டி
ஆனால், சனாதனம் குறித்து பேசியதும், மத்திய அமைச்சரவையே கூடி உள்ளது. பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கி உள்ள, 'இண்டியா' கூட்டணியானது, பிரதமரை நிலைதடுமாற வைத்து விட்டது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என, ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார்.
லோக்சபா தேர்தலை பார்த்து, பா.ஜ., தான் பயந்துள்ளது. பா.ஜ.,வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இண்டியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்த முடியாதா? என்ற அரசியல் கணக்கு.
அரசியலுக்காக மத உணர்வைக் கிளறி, ஆதாயம் தேடும் அற்ப அரசியலை, பழுத்த அனுபவமும், நாட்டின் மீது மாறா பற்றும் கொண்ட தலைவர்கள் புறந்தள்ளி, பா.ஜ.,விடம் இருந்து நாட்டை காக்கும் கடமையை வேகப்படுத்துவர்.
தி.மு.க., வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம். அதன் மீது, களங்கம் கற்பிப்பதன் வழியாக, அரசியல் செய்ய நினைத்தால், அந்தப் புதைகுழியில் பா.ஜ.,தான் மூழ்கும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
'அமைச்சர் உதயநிதி பேசியதன் முழு விபரம் அறியாமல், பிரதமர் பேசுவதா' எனக் கேள்வி எழுப்பி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், நேற்று பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. எனவே, முதல்வர் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், அரசின் கொள்கையாகவே பார்க்கப்படுகின்றன.சென்னையில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசுகையில், 'சிலவற்றை நாம் ஒழிக்க தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோல்தான் சனாதனம். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்' என்றார்.இதற்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதைத் தொடர்ந்து, நேற்று முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், 'அமைச்சர் உதயநிதி, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினர், பெண்ணினத்திற்கு எதிரான சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினார்' என, உதயநிதி பேசாத விஷயங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், 'உதயநிதி என்ன பேசினார் என்பதை அறிந்து கருத்து சொல்லி இருக்க வேண்டும்' என, மத்திய அமைச்சர்களுக்கும் அறிவுரை கூறி உள்ளார். அதேநேரம், உதயநிதி பேசியதை கண்டித்த, 'இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்கள் குறித்து, முதல்வர் எதுவும் கூறவில்லை.அரசு சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதால், 'அரசின் அதிகாரபூர்வ அறிக்கை இது தானா?' என, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகனிடம் கேட்டபோது, ''அறிக்கையை பார்த்து விட்டு கூறுகிறேன்,'' என்றார்; அதன்பின், அவர் அழைக்கவேயில்லை.