புதுடில்லி: நம் நாட்டில் முதன்முறையாக நடத்தப்படும், 'ஜி - 20' மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, மத்திய அரசு முழுவீச்சில் தயாராகி வருகிறது. உலகளாவிய தெற்கில் நிலவும் பிரச்னைகள், உக்ரைன் போரின் விளைவுகள், இருண்ட பொருளாதார சூழ்நிலை மற்றும் துண்டு துண்டாக கிடக்கும் புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற சில சிக்கலான சவால்களுக்கு விடை தேடி நடத்தப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, உலக தலைவர்கள் பலர் ஆர்வமுடன் புதுடில்லியில் குவிந்துள்ளனர்.
இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரபேியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள், 'ஜி - 20' அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும், சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்தையும் உள்ளடக்கிய இந்த பிரமாண்ட அமைப்பின் மாநாட்டுக்கு, இந்தமுறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
சிறப்பு அழைப்பாளர்கள்
கடந்த ஓராண்டாக தலைமை பொறுப்பை வகிக்கும் இந்தியா, பல்வேறு துறை சார்ந்த 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை கடந்த ஓராண்டில் நாடு முழுதும் நடத்தி முடித்துள்ளது. ஜி - 20 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழு இந்த கூட்டங்களில் பங்கேற்றன.
இவை, நாடு முழுதும் உள்ள 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன. இந்நிலையில், ஜி - 20 அமைப்பின் மாநாடு, இன்றும் நாளையும் புதுடில்லியில் நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் புதுடில்லி வந்துள்ளனர்.
மேலும், சர்வதேச நிதியம், உலக வங்கி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் தலைவர்களும் புதுடில்லியில் குவிந்துள்ளனர்.
இவர்கள் தவிர, ஜி - 20 அமைப்பில் உறுப்பினர்களாக இல்லாத வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்பெயின், சிங்கப்பூர், ஓமன், நைஜீரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இம்முறை சிறப்பு அழைப்பாளர்களாக மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
விழாக்கோலம்
முதன்முறையாக இந்த மாநாட்டை நடத்தும் கவுரவம் நம் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், அதை மிகப் பெரிய அளவில் நடத்தி வெற்றி பெறச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புதுடில்லி வந்திறங்கிய சர்வதேச தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. மாநாட்டுக்காக புதுடில்லி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த மாநாட்டில், உக்ரைன் விவகாரத்தில், மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யா - சீனாவுக்கும் இடையே எழுந்துள்ள மிகப் பெரிய கருத்து வேறுபாடு குறித்து, உலக தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்படுமா என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, சர்வதேச அளவில் இந்தியாவின் குரல் உரத்து ஒலிக்க துவங்கி உள்ளது. வளரும் நாடுகள், குறிப்பாக ஆப்ரிக்க கண்டம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது.
மேலும், 55 நாடுகளை உள்ளடக்கிய ஆப்ரிக்க யூனியனை, ஜி - 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்ப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக, ஜி - 20 நாடுகளின் தலைவர்களுக்கு, கடந்த ஜூன் மாதம் அவர் கடிதம் எழுதினார். இதற்கு ஆதரவு தெரிவித்து ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் பதில் கடிதம் எழுதினார்.
எனவே, இந்த உச்ச மாநாட்டில், ஆப்ரிக்க யூனியனை ஜி - 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியா வைக்கவுள்ள கோரிக்கைக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில், சர்வதேச கடன் கட்டமைப்பை மறுவடிவமைத்தல், வளரும் நாடுகளுக்கு கடன் உதவி அளிப்பது, 'கிரிப்டோ கரன்சி' மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குமுறைபடுத்துவது போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
'டிஜிட்டல்' பொது உட்கட்டமைப்பு, பருவநிலை நிதி, நிலையான வளர்ச்சி மற்றும் சுத்தமான எரிசக்தி போன்ற பிரச்னைகளில் இந்தியாவின் முன்மொழிவுக்கு இந்த மாநாட்டில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஜி - 20 மாநாட்டின் தலைமை பொறுப்பு, நம் நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, உலகளாவிய அளவில் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக உள்ளது. எனவே தான், 'வசுதைவ குடும்பகம்' எனப்படும், 'உலகமே ஒரு குடும்பம்' என்ற தத்துவத்தை நம் அரசு, மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
மாநாட்டுக்கு முன் பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவு: இந்தியா நடத்தும் முதல் ஜி - 20 மாநாட்டில், உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன். இது, மனித நேயத்தை மையமாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். உலகம் ஒரே குடும்பம் என்பதே நம் கலாசாரத்தில் வேரூன்றிய ஆழமான நெறிமுறை. அதுவே நம், ஜி - 20 தலைமையின் கருப்பொருள். 'ஓர் பூமி, ஓர் குடும்பம், ஓர் எதிர்காலம்' என்ற சிந்தனை, உலகம் முழுதும் ஒரே குடும்பம் என்ற நம் உலகக் கண்ணோட்டத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. வரிசையில் நிற்கும் கடைசி நபர் வரை சேவை செய்யும் மகாத்மா காந்தியின் பணியைப் பின்பற்றுவது முக்கியம்.இந்தியாவின் ஜி - 20 தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமிக்கதாகவும், தீர்க்கமானதாகவும், உலகளாவிய தெற்கின் வளர்ச்சி, பிரச்னைகளுக்கு தீவிரமாக குரல் கொடுக்கும் செயல் சார்ந்ததாகவும் உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜி - 20 மாநாடு குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய அதிகாரி அமிதாப் காந்த் கூறியதாவது:உலகளாவிய தெற்கின் வளர்ச்சியில் பிரதமர் மோடி அதீத நம்பிக்கை வைத்துள்ளார். எனவே தான், ஆப்ரிக்க யூனியனை, ஜி - 20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அவர் அனைத்து உறுப்பு நாடுகளிடமும் முன்வைத்துள்ளார். அதற்கான நல்ல முடிவு மாநாட்டுக்கு முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.இந்த மாநாட்டில், புதுடில்லி தலைவர்களின் பிரகடனம் உலகளாவிய தெற்கு மற்றும் வளரும் நாடுகளின் குரலாக இருக்கும்.மாநாட்டில் புதுடில்லி தலைவர்களின் பிரகடனம் தயாராக உள்ளது. அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை. ஏனெனில், இந்த பிரகடனம் மாநாட்டின் போது தலைவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். அதை தலைவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னரே இந்த பிரகடனத்தின் உண்மையான சாதனை குறித்து நாங்கள் பேச முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.