அடுப்படியில் முடங்கி விடாதே பெண்ணே... அளப்பரிய திறமைகள் உன் முன்னே... சாதம் சமைக்கத்தான் பெண் என்பது மடமை.. சாதிக்க முயன்றிடு பெண்ணே... என்ற கூற்றிற்கு ஏற்ப பள்ளி, கல்லுாரிகள், திருமணம், குழந்தைகள் எனவாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நுழைய ஆரம்பிக்கும் தருவாயில், தன் கனவை நோக்கி அடியெடுத்து அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் திலகவதி.
சில பணிகள் ஆண்களுக்குத்தான் ஏற்றவை என்று சமூகம் அழுத்தமாகக் கருதிக்கொண்டிருந்தபோது, அப்படியொரு வேலையான புகைப்படக் கலையில் அசத்துகிறார் இவர். அரக்கோணத்தை பூர்வீகமாக் கொண்ட இவர் படித்தது சென்னை. சிறுவயதில் இருந்து போட்டோகிராபி மீது தனி ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று தெரியாமல் இருந்திருகிறார். ஆண்டுகள் நகர திருமணம், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கைக்குள் சென்று விட்டார்.
உள்ளத்தில் மட்டுமே தன் திறமையின் மீதான அபார நம்பிக்கை சுடர் விட்டு எரிந்து கொண்டே இருந்திருக்கிறது. அதற்கு அலைபேசியை சரியான ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார். தன் அலைபேசியில் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது கூடுதல் ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
குடும்பத்தின் ஒத்துழைப்புடன், புகைப்படம் எடுப்பதற்காகவே நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து தன் புகைப்பட வேட்கையை தீர்த்துக் கொண்டிருந்தார். இவரது புகைப்படங்கள் ஒரு கதை சொல்லும் அளவிற்கு ரசிக்கும்படியாய் அனைத்து தரப்பிலும் பராட்டையும் பெற்றது.
இதன் பின் அலைபேசியிலிருந்து கேமராவிற்கு மாற, இதற்காக முறையாக போட்டோகிராபி வகுப்புகளுக்கு சென்று கற்றார். முதலில் கடினமானதாக இருந்தபோதுலும், சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பதைப்போல் தொடர் பயிற்சி , முயற்சியும் இவரை முறையான புகைப்படக் கலைஞராக மாற்றி உள்ளது.
ஆன்லைன்வாயிலாக நடக்கும் புகைப்பட போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பெற்றுள்ளார். தற்போது புகைப்படத்தின் மீதான காதலால் தமிழகத்தின் குடைவரை கோயில்களை படம் பிடித்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் பயணிக்கிறார். இதோடு தமிழகத்தின் பழங்கால கோயில்களை புகைப்படம் மூலமாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
திலகவதி கூறுகையில், ''கனவு மட்டுமே கண்டு கொண்டிருந்தால் ஒரு நாள் காலாவதியாகிப்போகும். முயற்சி மட்டுமே கனவுகளுக்கு சிறகுகள் கொடுக்கும். முயன்று முதல் அடி எடு என்பதற்கேற்ப கனவை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறேன். இதற்கு கணவர் ஆறுமுகராஜன் ஒத்துழைப்பும், ஆதரவும் தான் காரணம் ,'' என்றார்.
''உன் உள்மனதிற்கு ஏதுவாக நீ உன்னுள் உயிர் கொடுக்கிறாயோ அதுவாகவே அது செயல்படும். உன்னிடம் இருந்தேமுதலில் வெற்றியை அடைய நம்பிக்கை என்னும் விதையை மனதில் துாவி பிள்ளையார் சுழி போடு என்ற வார்த்தைகளுக்கு உயிர்ப்பூட்டும் வகையில் தன்னம்பிக்கையால் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த பெண் புகைப்படக் கலைஞர் திலகவதியும் பாராட்டிற்குரியவரே.