மதுரை: மதுரை நகரை மட்டும் குறிவைத்து, பகல் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கொட்டி தீர்த்த கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வடகிழக்கு பருவமழையால் மதுரையில் தொடர்ந்து மழை பெய்கிறது. தினமும் ஒவ்வொரு பகுதியாக பெய்யும் மழை, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை நகரை மட்டும் குறிவைத்து கொட்டி தீர்த்தது. வழக்கத்தைவிட, மழைத்துளி கனமாக விழுந்தது. இதனால் வாகனங்கள் பயணிக்க முடியாமல் ஒதுங்கி நின்றன. மதியம் 2 மணிக்கு புதூர் பகுதியில் ஆரம்பித்த மழை, அவுட்போஸ்ட், கோரிப்பாளையம், சிம்மக்கல், வடக்குவெளிவீதி, வக்கீல்புதுத்தெரு, தமிழ்ச்சங்கம் ரோடு, பெரியார் பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு என கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து பெய்தது. இதனால் செல்லூர், டவுன் ஹால் ரோடு, எல்லீஸ்நகர், எச்.ஏ.ஹான் ரோடு, காந்தி மியூசியம், கர்டர் பாலம் பகுதியில் முழங்கால் அளவிற்கு வெள்ளம் சூழ்ந்தது.
முதன்மை கல்வி அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உட்பட அரசு அலுவலக வளாகங்கள் தண்ணீரில் மிதந்தன. மதுரா கோட்ஸ் பாலம், யானைக்கல் பாலம் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தண்ணீரில் நனைந்த டூவீலர்கள் நகர முடியாமல் தவித்தன. இந்நேரத்தில் பள்ளி முடிந்ததால், அந்த வாகனங்களும் நகர முடியாமல் சிக்கின. இதனால் பெற்றோர் டூவீலரில் வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதே நேரத்தில், உசிலம்பட்டியில் தூறல் மட்டுமே விழுந்தது. எழுமலையில் லேசான மழை எட்டி பார்த்தது. மழை பெய்யாத மேலூர் ரம்மியமாக காட்சி அளித்தது. வாடிப்பட்டியில் அந்த அறிகுறியும் இல்லை. முறை வைத்து நகரில் பெய்த மழை இன்று புறநகரிலும் பொழியுமா என்பது இயற்கைக்கே வெளிச்சம்.