விஜயவாடா: ஆந்திராவில், திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த, 371 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, 73, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சந்திரபாபு நாயுடு கைது காரணமாக, ஆந்திரா முழுதும் பதற்றம் நிலவுவதால், பல பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு வாரியத்தில், 3,350 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்காக, 371 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக, 2021ல் ஊழல் தடுப்பு வாரியம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக, சந்திரபாபு நாயுடு நேற்று முன் தினம் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.
விஜயவாடாவில் உள்ள மாநில போலீசின் குற்றப் புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தில் அவரிடம், 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று காலையில், விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சந்திர பாபு நாயுடுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு வாரிய சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு விசாரணை குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
'இந்த ஊழலில் முக்கிய சதி திட்டத்தை தீட்டியதால், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையின்போது, கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.
'பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, நினைவில்லை என்றே கூறியுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டிருந்தது.
கொள்கை முடிவு
இந்த வழக்கில் தனக்காக, தானே ஆஜராகி சந்திரபாபு நாயுடு வாதாடியதாவது:
நான் எந்த தவறும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக என்னை கைது செய்துள்ளனர்.
திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பணிகள், அரசின் கொள்கை முடிவு. இந்த விவகாரத்தில் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்தி வைத்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிவியது. இதையடுத்து மாலை, 6:30 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் கூடியது. அப்போது, இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு, ராஜமகேந்திரவரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த வழக்கில், 37வது குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் அரசு அதிகாரிகளான ஜி.சுப்பா ராவ், லட்சுமிநாராயணா ஆகியோர், முதல் இரண்டு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விஜயவாடா நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு ஆயிரக்கணக்கான தெலுங்கு தேசம் கட்சியினர் குவிந்ததனர். அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், விஜயவாடா மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுகிறது.
ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஜாமின் கேட்டு, சந்திரபாபு நாயுடு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி அங்கு வந்திருந்தார். மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்ட அவரை, உறவினர்கள் அமைதிப்படுத்தினர்.சந்திரபாபு நாயுடுவின் மகனும்,தெலுங்கு தேசம் கட்சி பொது செயலருமான நர லோகேஷும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அவர், சந்திரபாபு நாயுடுவுடனும், வழக்கறிஞர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக விஜயவாடா மாவட்ட எல்லைக்குள் நுழைய முயன்ற, பிரபல தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, கரிக்காடு சோதனைச்சாவடி அருகே காரை நிறுத்தி இறங்கிய பவன் கல்யாண், தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.