'சிறப்பு குழந்தைகள்' பராமரிப்பில் பெற்றோர், சமூகத்தின் பங்கு!
'சிறப்பு குழந்தைகள்' பராமரிப்பில் பெற்றோர், சமூகத்தின் பங்கு!

'சிறப்பு குழந்தைகள்' பராமரிப்பில் பெற்றோர், சமூகத்தின் பங்கு!

Updated : செப் 13, 2023 | Added : செப் 13, 2023 | |
Advertisement
ஆர். ஜமுனா கட்டுரையாளர், புதுடில்லி, 'ஜாமியா மில்லியா இஸ்லாமியா' மத்திய பல்கலையில் சிறப்புக் கல்விக்கான உதவிப் பேராசிரியராக பணியாற்றுபவர். சிறப்புக்கல்வியில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர். கற்பித்தல், ஆராய்ச்சி யில் 12 ஆண்டு கால அனுபவமுள்ளவர். 20 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளை தேசிய, சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார். 'அறிவுசார் குறைபாடுடைய சிறுமியர் சுய
The role of parents, society in the care of special children!  'சிறப்பு குழந்தைகள்' பராமரிப்பில் பெற்றோர், சமூகத்தின் பங்கு!

ஆர். ஜமுனா

கட்டுரையாளர், புதுடில்லி, 'ஜாமியா மில்லியா இஸ்லாமியா' மத்திய பல்கலையில் சிறப்புக் கல்விக்கான உதவிப் பேராசிரியராக பணியாற்றுபவர். சிறப்புக்கல்வியில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர். கற்பித்தல், ஆராய்ச்சி யில் 12 ஆண்டு கால அனுபவமுள்ளவர். 20 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளை தேசிய, சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார். 'அறிவுசார் குறைபாடுடைய சிறுமியர் சுய பாதுகாப்பு திறன்கள்' என்ற நுாலின் ஆசிரியர்.'சிறந்த சிறப்புக் கல்வி ஆசிரியர்' விருது பெற்றவர். மாற்றுத்திறன் குழந்தைகளின் சுய பாதுகாப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.

உலக வங்கி அறிக்கைப்படி இந்தியாவில் ஏழு கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். சிறப்பு குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருக்கிறது. கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்வை குறைபாடு, காது கேளாமை, வாய் பேச முடியாத குழந்தைகள், கை கால் ஊனமுற்ற குழந்தைகளுக்கான பள்ளிகள் மிகக்குறைந்த எண்ணிக்கையிேலயே செயல்பட்டன. இதனால், பெற்றோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். தற்போது, நிலைமை அவ்வாறின்றி மேம்பட்டிருக்கிறது.

சிறப்புக்குழந்தைகளும் சாதாரண பள்ளிகளிலேயே பயிலும் வகையில், 'இன்க்ளூசிவ் எஜுகேஷன்' என்று சொல்லக்கூடிய 'உள்ளடக்கிய கல்வி முறை' பெரிதும் உதவுகிறது. உடல் ஊனமுற்ற மற்றும் ஊனமற்ற மாணவர்கள் யாவரும் ஒன்றாக சேர்ந்து பயிலக்கூடிய வகையில் மாறுபட்ட கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதன் வாயிலாக ஆசிரியர்கள், பெற்றோர், குழந்தைகள் மத்தியில் ஆரோக்கியமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.


வரப்பிரசாதம்'விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது' என்று நாம் மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது; காரணம், சிறப்பு குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. நமது நாட்டில், 1995ல் இயற்றப்பட்ட PWD சட்டத்தின்படி (பர்சன்ஸ் வித் டிஸபிலிட்டிஸ்) 7 வகை குறைபாடுகள் வரையறுக்கப்பட்டிருந்தன. இதுவே, 2016ல் இயற்றப்பட்ட RPWD (ஊனமுற்ற நபர்களுக்கான உரிமைச் சட்டம்) படி 21 வகையான குறைபாடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த 21 வகை குறைபாடுகளும் உடல் ஊனம். அறிவார்ந்த இயலாமை, மன நடத்தை இயலாமை மற்றும் இதர குறைபாடுகள் என்ற 5 வகை தலைப்பின்கீழ் வருகின்றன. முன்பெல்லாம் பள்ளிகளில் பார்வை குறைபாடு, காதுகேளாமை, வாய் பேச இயலாமை மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளே கற்று வந்தனர். தற்போது, மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள், ஆட்டிசம், கவன குறைவு மற்றும் மிகை செயல்பாடு கோளாறு, கற்றலில் குறைபாடு என, பலதரப்பட்ட குறைபாடுகள் உடைய குழந்தைகளும் கல்வி கற்று வருகின்றனர்.

பார்வை குறைபாடு, வாய்பேச முடியாமை, காது கேளாமை போன்ற பாதிப்புகளுடன் கூடிய குழந்தைகள் கல்வி பயில தொழில்நுட்ப ரீதியான (Assistive technology ) உதவிகள் வந்துவிட்டன. இதனால் இக்குழந்தைகள் பிற சாதாரண குழந்தைகளைப் போலவே அனைத்து துறைகளிலும் பயின்று சாதித்து வருகின்றனர். சாதாரண குழந்தைகளின் திறமைக்கு ஈடு கொடுத்து பலரும் முன்னேறுகின்றனர். மேற்கண்ட தொழில்நுட்பமானது அவர்களின் ஊனத்தையே மறக்கடிக்க செய்கிறது; இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.


கண்டறிவது எப்படிமேற்கண்ட முன்னேற்றங்கள் நமக்கு ஆறுதல் அளித்தாலும், மனவளர்ச்சி குறைபாடு, ஆட்டிசம், கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆட்டிசம், கற்றல் குறைபாடுடைய குழந்தைகள், பிற ஆரோக்கியமான குழந்தைகள் போலவே காணப்படுவர். உடல் ரீதியாக எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களிடம் காண இயலாது. அவர்களுடன் உரையாடும்போதுதான் நமக்கு தெரியவரும். தங்களின் பிள்ளைகளுக்கு இவ்வாறான குறைபாடு உள்ளது என்பதையே பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை; அவர்களின் மனம் ஏற்பதில்லை.

ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகளின் பிரச்னைகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. இதன் காரணமாக, தங்கள் குழந்தைகளின் பிரச்னையை கண்டறிந்து அவர்களுக்கான பயிற்சிகளை அளிக்க பெற்றோர் தவறிவிடுவதும் நடக்கிறது. இதனால் அந்த குழந்தைகளின் குறைபாடுகள் நாளடைவில் அதிகரித்துக் கொண்டே போகின்றன.


பயிற்சி அவசியம்குறைபாடுடன் குழந்தை தங்களுக்கு பிறந்துள்ளது என்பதை எந்த பெற்றோராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றுதான்; அது வேதனையளிக்கூடியதும்கூட. ஆனாலும், அவ்வாறாக பிறந்த பின் அந்த குழந்தைக்கான பேச்சு, பிஸியோதெரபி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளித்து, பாதிப்புகள் அதிகரித்து விடாமல் தடுப்பதும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதும் அவசியமாகிறது.

குறைபாடுடன் பிறந்த குழந்தைகளின் பிரச்னையினை, ஆறு வயதுக்குள் பெற்றோர் கண்டுணர முடியும். உரிய மருத்துவ ஆலோசனை பெற்று பிரச்னைகள் வளராமல் தடுக்க முடியும். இவ்வாறான கால கட்டத்தில் குறைபாடுகளை கண்டுபிடிக்க தவறும் பட்சத்தில் அந்த குழந்தைகளின் நடத்தை, கல்வி கற்றல் போன்ற விஷயங்களில் அவர்களை முன்னேற்ற முடியாமல் போய்விடும். ஆரம்ப நிலையில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறைபாட்டின் தன்மையை குறைக்கும். சாதாரண குழந்தைகளுடன் இணைந்து வாழ வாழ் நாள் முழுவதும் உதவும்.


ஊக்கப்படுத்துங்கள்சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஏற்படும் விழிப்புணர்வே, அக்குழந்தைகளுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை அமைத்து தரும். ஆட்டிசம், மன வளர்ச்சி குறைபாடு போன்றவை, நோய் பாதிப்பு அல்ல; அது ஒரு நிலை. மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சையால் குணப்படுத்த இயலாது. இப்பிரச்னை வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாதிப்பினை சரி செய்து குணமாக்குவதாக யாராவது கூறினால், அதை உண்மை என நம்பி நேரத்தையும், பணத்தையும் வீணடித்து விடக்கூடாது; தவறான மருத்துவமுறை குழந்தைகளின் பிரச்னையை மேலும் அதிகரித்துவிடும் அபாயம் உள்ளது.


வருத்தம் வேண்டாம்குறைபாடுடன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அதைவிட பெரிய வேதனையும், துயரமும் அந்த பெற்றோருக்கு வேறு ஒன்றுமில்லை. வலியும், வேதனையும் அந்த குடும்பத்தில் வியாபித்துக்கொள்ளும். சில நேரங்களில் குழந்தை வளர்ப்பில் சிக்கல் ஏற்பட்டு குடும்பங்கள் சிதறிவிடுவதும் உண்டு; இது தேவையற்றது. குறைபாடுடன் ஒரு குழந்தை பிறந்து விட்டால் முதலில் பெற்றோர், அந்த குழந்தையினை வளர்க்க மனதளவில் தயாராக வேண்டும். பிறரின் விமர்சனங்கள், பேச்சுகளுக்கு வருத்தமோ, வேதனையோ கொள்ளத்தேவையில்லை.

அதேபோன்று, இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளை பொது நிகழ்ச்சிகள், பொது இடங்களில் காணும்போது, அவர்களை வித்தியாசமாகவும், வேறுவிதமாகவும் பார்க்கத்தேவையில்லை. 'இந்த குழந்தையை ஏன் வெளியில் கூட்டி வருகிறார்கள்' என்ற எதிர்மறை விமர்சனங்களையும் முன் வைக்கக்கூடாது.

இதனால் அந்த பெற்றோர் அவமானத்துக்கு ஆளாகிறார்கள். பிள்ளைகளின் நிலையினை நினைத்து வேதனையும், விரக்தியும் அடைகிறார்கள். சிறப்பு குழந்தைகள் பராமரிப்பில் இந்த சமூகத்துக்கும் சில கடமை, பொறுப்புகள் உள்ளன.


நாம் செய்யும் உதவிசிறப்புக் குழந்தைகளை நேர்மறை சிந்தனையுடன் பார்க்க வேண்டும். பொது இடங்களுக்கு அழைத்து வரும் பெற்றோரை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வும், ஆதரவும் தான் அந்த பெற்றோருக்கு மிகப்பெரிய ஆறுதல். காரணம், வாழ்நாள் முழுவதும் ஒருவித வலியுடன் இக்குழந்தையினை வளர்க்கும் பெற்றோருக்கு நாம் தரும் இதுபோன்ற ஆதரவும், அன்பும் விலை மதிப்பற்றது; அவர்களுக்கு அவசியமானது; பேருதவி.

குறைபாட்டுடன் கூடிய ஒரு குழந்தை பிறக்க பல காரணங்கள் உண்டு. இதற்கு முன், ரத்த உறவுகளுக்குள் நடக்கும் திருமணங்கள் இதற்கான காரணங்களாக கூறப்பட்டன. தற்போது, இதுபோன்ற குழந்தைகள் யாருக்கு வேண்டுமானாலும் பிறக்கலாம்; பிறக்கின்றன. இதற்கும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. பேறு காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமை, கர்ப்ப காலத்தில் மன ரீதியான நெருக்கடிகளுக்கு ஆளாகுதல், அதிகப்படியான கதிரியக்க வீச்சுகளுக்கு உள்ளாதல், பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள், எடை குறைவாக பிறத்தல், தாய்ப்பால் ஊட்டாமல் வளர்த்தல், 3 வயது வரை ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணம் தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.

சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் முதலில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தங்களின் குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ, அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்களின் எதிர்பார்ப்புகளை, சமூகத்தின் நிர்பந்தங்களை குழந்தைகளின் மீது திணிக்க முற்படக்கூடாது; இதுவே, சிறப்புக் குழந்தையை பராமரிப்பதற்கான அடிப்படை; அதை உணர்ந்து செய்வோம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X