போட்டிகள் நிறைந்த இன்றைய வேலைவாய்ப்பு சந்தையில், சரியான வேலை கிடைப்பது சவாலான ஒன்று. வேலை தேடுபவர், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே வேலைவாய்ப்பை பெற முடியும். இதற்கு நேர்காணல் குறித்து முன் தயாரிப்பு அவசியம். நேர்காணலில் எதையெல்லாம் கூறவேண்டுமென்பதை விட, எதையெல்லாம் கூறகூடாதென்பதை அறிந்து வைத்திருப்பது நல்லது. அது குறித்து பார்ப்போம்.
1. முந்தைய நிறுவனத்தை விமர்சித்தல் :
நீங்கள் பணியாற்றிய முந்தைய நிறுவனத்தை பற்றி எதிர்மறையாக பேசுவது நல்லதல்ல. எந்தவொரு சூழ்நிலையிலும், நேர்மறையாக உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பேச வேண்டும்.
2. எதிர்மறையாக பேசுதல்:
நேர்காணலில், உங்களை பற்றி எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தால், உங்களால் முடியாதவற்றை நீங்களே பட்டியலிட்டது போல் ஆகிவிடும். அதற்கு பதிலாக, நிறுவனத்திற்கு மதிப்பை கூட்ட எவ்வாறு பணியாற்றுவீர் என்பதை தெரிவிக்கலாம்.
3. எனக்கு தெரியாது என கூற வேண்டாம் :
நேர்காணலில், உங்களுக்கு விடை தெரியாத கேள்வி கேட்கப்படலாம். நீங்கள் உடனடியாக எனக்கு தெரியாது என கூற வேண்டாம். நேர்காணல் நடத்துவோரிடம், கேள்வி குறித்து சிந்திக்க ஒரு நிமிடம் தர முடியுமா என கேட்டு பாருங்கள்.
4. ரெஸ்யூமில் இருக்கிறது என கூறாதீர் :
நேர்காணலில், சில நேரங்களில் உங்கள் ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படலாம். அதை ஏற்கனவே ரெஸ்யூமில் உள்ளது என கூற கூடாது. உங்களுடைய சொந்த வார்த்தையில் சொல்லுங்கள். கேட்கப்படும் கேள்விக்கு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்.
![]()
|
5. சம்பளம் குறித்து முதலில் பேச கூடாது :
நேர்காணல் என்பது மென்மையான நடனம் போன்றது. நிறுவனத்தின் சார்பில் நேர்காணல் எடுப்பவர் சம்பளம் குறித்து பேசும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். நீங்கள் சம்பளம் குறித்து முதலில் பேசினால் நேர்காணல் முடிந்து விட்டது என அர்த்தமாகும்.
6. தனிப்பட்ட விஷயங்கள் வேண்டாம் :
நேர்காணலில் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேச வேண்டாம். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து மட்டும் பேசுங்கள். பொதுவாக நேர்காணல் நடத்துபவர், உங்கள் வேலை குறித்து மட்டுமே பேச விரும்புவார்.
7. எந்த கேள்வியும் இல்லையென கூற வேண்டாம் :
நேர்காணல் நடத்துபவர் கேட்கும் போது, எந்த கேள்வியும் இல்லையென கூற வேண்டாம். நிறுவனம் குறித்து நீங்கள் ஆராய்ச்சி செய்ததில் எழுந்த ஆக்கப்பூர்வமான,
பயனுள்ள கேள்விகளை கேளுங்கள்.
8. ஆராய்ச்சி செய்யவில்லை என கூறாதீர் :
எனக்கு நிறுவனம் குறித்து ஆராய்ச்சி செய்ய நேரமில்லை என கூறுவது நேர்காணலுக்கு முடிவுக்கு கொண்டு வரக்கூடும். எனவே நிறுவனம் குறித்து ஆராய்ச்சி செய்ய நேரம் எடுத்து கொள்ளுங்கள்.