வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு : 'காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது' என்று, கர்நாடக சிறப்பு அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, உச்ச நீதிமன்றத்திலும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிலும் மனு தாக்கல் செய்ய இருப்பதாக, முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடந்து வருகிறது. நடப்பாண்டு, தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல், அம்மாநில அரசு முரண்டு பிடிக்கிறது. இது தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம், அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில், நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது. இதில், தமிழக, கர்நாடக மாநில அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.
அப்போது, தமிழகத்தின் டெல்டாவில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்றும் விதமாக, நேற்று துவங்கி, அடுத்த 15 நாட்களுக்கு, விநாடிக்கு, 5,000 கன அடி தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக விவாதிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று, சிறப்பு அனைத்து கட்சி கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது.
தலைவர்கள் 'ஆப்சென்ட்'
துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், மஹாதேவப்பா, செலுவராயசாமி, தலைமை செயலர் வந்திதாஷர்மா, நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராகேஷ் சிங், மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அனைத்து கட்சிகளின் முன்னாள் முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்தும், காங்கிரசின் வீரப்ப மொய்லி தவிர, பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட முக்கிய தலைவர்கள் யாரும், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடந்தது.
106 டி.எம்.சி.,
கூட்டத்துக்கு பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
அவசரமாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததால், ஏற்கனவே நிர்ணயித்த நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டி இருந்த சிலர் வரவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்கமாக மழைபெய்யும் காலத்தில் ஆண்டுக்கு, 177.25 டி.எம்.சி., நீர் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும்; துரதிர்ஷ்டவசமாக, இம்முறை மழை பெய்யாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மழை இல்லாத கஷ்ட காலத்தில் தமிழகத்துக்கு, 99 டி.எம்.சி., நீர் கொடுக்க வேண்டும். இதில், 37.7 டி.எம்.சி., நீர் கொடுக்கப்பட்டுள்ளது. பாசனத்துக்காக, கர்நாடகாவுக்கு 70 டி.எம்.சி., நீரும்; குடிப்பதற்கு 33 டி.எம்.சி., நீரும்; தொழிற்சாலைகளுக்கு 3 டி.எம்.சி., நீரும் தேவைப்படுகிறது.
ஆனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நான்கு அணைகளிலும் சேர்த்து மொத்தம், 53 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. பாசனத்துக்கு கால்வாய்களில் தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஆட்சேபனை இல்லை
தமிழகத்துக்கு, முதலில் 10,000 கன அடி நீர், இரண்டாவது முறையாக 5,000 கன அடி நீர், தற்போது மீண்டும், 5,000 கன அடி நீர் திறந்து விடும்படி உத்தரவு வந்துள்ளது. தண்ணீர் இருந்தால் கொடுப்பதற்கு ஆட்சேபனை இல்லை.
தற்போது மழை இல்லாததால், தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க இயலாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிலும், மனு தாக்கல் செய்யப்படும். துணை முதல்வர் சிவகுமார், விரைவில் டில்லி சென்று, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துவார்.
அனைத்து கட்சி குழுவை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இரண்டாவது முறை கடிதம் எழுதப்படும். வரும் 18ம் தேதி முதல், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடப்பதால், காவிரி நீர் விஷயம் குறித்து விவாதிப்போம் என்று எம்.பி.,க்கள் உறுதி அளித்துள்ளனர். விரைவில் நானும் டில்லி சென்று, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சருக்கு கடிதம்
கர்நாடகா விவசாயிகள் குடிநீர் தேவை கருதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி தமிழகத்திற்கு 5,000 கன அடி தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெ காவத்திற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
'தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட கூடாது' என வலியுறுத்தி, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக விவசாயிகள், கன்னட அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்றும், தமிழகம் - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை தரையில் போட்டு மிதித்து, கோஷங்கள் எழுப்பினர். பின், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா, சாம்ராஜ் நகர் உட்பட பல பகுதிகளிலும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சத்தியமங்கலத்தில்தமிழக - கர்நாடக எல்லையான, புளிஞ்சூர் செக்போஸ்டில் நேற்று காலை, 11:45 மணிக்கு கர்நாடகா விவசாய சங்க தலைவர் பாக்யராஜ் தலைமையில், 40 விவசாயிகள் வந்தனர்.
அவர்கள், 'காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம்' என்று கூறியபடி, செக்போஸ்ட் அருகே சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.விவசாய சங்கத்தை சேர்ந்த, 40 பேரையும் கர்நாடக மாநில போலீசார் குண்டுகட்டாக துாக்கி சென்று, கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். திடீர் போராட்டத்தால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், இரு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.