பாட்டரிகள் செய்வதில் இருந்து, மருந்துகளில் சேர்க்கப்படுவது வரை பல்வேறு பயன்பாடுகளை உடையது லித்தியம். இது இயற்கையிலேயே கிடைத்தாலும் கூட, தற்போது பின்பற்றப்படும் முறையில் இதைப் பிரித்து எடுப்பது சுலபமல்ல.
லித்தியம் அதிகமுள்ள உப்பு நீர்ப் பகுதியைக் கண்டுபிடித்து, நிலத்தடியில் இருந்து நீரை வெளியே எடுத்து, குளம் போல் தேக்கி வைப்பர். அந்தக் குளத்தில் உள்ள நீர், வெப்பத்தால் ஆவியாக சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். குளம் வற்றிய பின்பு, படிந்திருக்கும் லித்தியமை எடுத்துப் பயன்படுத்தலாம்.
இந்தப் பாரம்பரிய முறையில் சில சிக்கல்கள் உள்ளன. குளம் வெட்ட அதிகளவு இடமும், ஆற்றலும் தேவை. சூரிய வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே வேகமாக நீர் ஆவியாகும்.
இவற்றை மனத்தில் கொண்டு அமெரிக்காவின் பிரின்சிடன் பல்கலை ஆய்வாளர்கள் புது வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இம்முறை வாயிலாக குறைந்த அளவு லித்தியம் உள்ள பகுதிகளில் கூட, ஒரே மாத காலத்தில், குளம் வெட்டும் பரப்பளவில் 10 சதவீத இடத்தை மட்டும் பயன்படுத்தி லித்தியம் எடுக்க முடியும். இம்முறை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பது கூடுதல் சிறப்பு. ஒரு பெரிய தொட்டியில் லித்தியம் நிறைந்த நீரை நிரப்பி, அதில் செல்லுலோஸ் நார்களால் ஆன கயிறுகளின் ஒரு முனையை நுழைத்து வைப்பர். நாரின் உட்பகுதி நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
வெளிப்பகுதி நீரை வெளியேற்றும். நீர் ஆவியாகி விட, கயிற்றின் மீது உப்பு படிந்திருக்கும். இதில் கலந்திருக்கும் சோடியம் க்ளோரைடு, லித்தியம் ஆகியவற்றைச் சுலபமாகப் பிரித்தெடுக்க முடியும்.
100 கயிறுகளைக் கொண்டு விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் செய்து பார்த்த சோதனை வெற்றி அடைந்தது.