நமது சூரியக் குடும்பத்தில், பல விண்கற்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. செப்டம்பர் 7ம் தேதியன்று, 6.5 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று, ஜி.பி.எஸ்., செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையை விட ஐந்து மடங்கு குறைவான துாரத்தில், பூமியைக் கடந்து சென்றது.
C9FMVU2 என்று பெயரிடப்பட்ட இந்தச் சிறிய விண்கல் கடந்த வியாழக்கிழமை காலை பூமிக்கு மிக அருகில் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. விண்கல் பூமியை 4,000 கிலோமீட்டர் துாரத்தில் கடந்து சென்றது.- இது பூமிக்கும் -நிலவுக்கும் இடையேயான துாரத்தில் 1 சதவீதம் ஆகும்.
விண்கல் மிகவும் சிறிதாக இருந்ததால், அது பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது. இந்த விண்கல் பூமியை நோக்கி வந்திருந்தால், பூமியின் வளிமண்டலத்தில் மோதி எரிக்கப்பட்டு, கண்கவர் ஒளியை ஏற்படுத்தியிருக்கும். ஒருசில சிறிய துண்டுகள் மட்டும் பூமியின் மேற்பரப்பில் விழுந்திருக்கும்.
இதுவரை பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு அருகில் சுற்றிவரும் 30,000க்கும் மேற்பட்ட விண்கற்களை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் ஏறத்தாழ 2,300 மட்டுமே ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.
அவற்றிலிருந்து பூமியைக் காப்பதற்கு, பூமிக்கு அருகிலுள்ள விண்கற்களின் பாதையை வரைபடமாக்க வானியலாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.