வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டில்லியில்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டில் தனியாக
சந்தித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நடத்திய பேச்சு,
அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி
விவகாரம், தொகுதிகள் எண்ணிக்கை
உள்ளிட்ட பல சமாச்சாரங்கள்,
இந்த சந்திப்பில் பேசப்பட்ட போதிலும், தி.மு.க., அமைச்சர்கள்
தொடர்பான முக்கியமான 'பைல்' ஒன்றை, அமித் ஷாவிடம் பழனிசாமி
வழங்கிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமித் ஷா - பழனிசாமி
சந்திப்பு குறித்து, டில்லி பா.ஜ., வட்டாரம் கூறியதாவது: அமித் ஷா
வீட்டுக்கு பழனிசாமி சென்றபோது, அவருடன் அ.தி.மு.க., -
எம்.பி.,க்கள் தம்பி துரை, சந்திரசேகர் ஆகியோர் உடன் சென்றனர்;
ஆனாலும், அமித் ஷாவை
சந்தித்தபோது, இவர்கள் யாருமே உடன் இல்லை.
11 தொகுதிகள்
பழனிசாமி,
அவரது உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகிய மூவர் மட்டுமே
அனுமதிக்கப்பட்டனர். தனிப்பட்ட முறையில் சந்திப்பு இருக்க
வேண்டுமென்று, இரு தரப்புமே திட்டமிட்டுக் கொண்டதால், இப்படி
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரும் லோக்சபா தேர்தலில்,
பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்தே, பிரதானமாக
பேசப்பட்டது.
அதன்படி, பழனிசாமியிடம், அமித் ஷா தரப்பில், ஒரு
பட்டியல் தரப்பட்டது. அதில், மொத்தம் 11 தொகுதிகள், பா.ஜ.,வுக்கு
கேட்கப்பட்டிருந்தன. தவிர, மேலும் நான்கு தொகுதிகளும் இடம்பெற்று
இருந்தன. இந்த 11 தொகுதிகளில், கொங்கு பகுதியில் மட்டும் ஈரோடு,
நீலகிரி, கோவை என, மூன்று தொகுதிகள் இடம் பெற்றன.தற்போதைய
மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மருமகனுக்காக,
ஈரோடு தொகுதி கேட்கப்பட்டதை அறிந்த பழனிசாமி, கொங்கு தொகுதிகளை
விட்டுக் கொடுப்பதில் உள்ள சிரமங்களை விளக்கினார்.
துாத்துக்குடி
தொகுதியை, சசிகலா புஷ்பாவுக்கு கேட்பதையும் ஏற்க, பழனிசாமி
தயக்கம் காட்டினார். பேச்சு அடுத்த கட்டத்தை எட்டியபோது, சிக்கல்
உருவானது. குறிப்பாக, பாரிவேந்தர், ஜான் பாண்டியன், தேவநாதன்
யாதவ், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர், தங்களுடன் நீண்ட காலம்
பயணிப்பதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கான தொகுதிகளை கேட்டதற்கு,
அதற்கு பழனிசாமி சம்மதிக்கவில்லை.
மேலும், 'இவர்களுக்கான தொகுதி
ஒதுக்கீட்டில், கூட்டணி தலைவர் என்ற வகையில், நானே
முடிவெடுக்கிறேன்; அதை பா.ஜ., ஏற்க வேண்டும்' என்று கேட்டுக்
கொண்டார். இதைக் கேட்டதும், முதலில் யோசித்த அமைச்சர் அமித் ஷா,
மேற்கொண்டு எதுவும் வற்புறுத்தவில்லை.
ரகசிய பைல்
இதையடுத்து,
தமிழக அரசியல் நிலவரம் குறித்து, இருவரும் பேசத் துவங்கினர்.
அப்போது, தி.மு.க., அமைச்சர்கள் மீதான வழக்குகளின் தற்போதைய நிலை
குறித்த விபரங்கள் அடங்கிய பைல் ஒன்று, அமைச்சர் அமித் ஷாவிடம்
வழங்கப்பட்டது.லோக்சபா தேர்தலுக்கு முன், எடுக்க வேண்டிய
நடவடிக்கைகள், எந்தெந்த அமைச்சர்கள், எந்தெந்த தொகுதிகளில்
தலைவலி தருவர் என்றும், அதில் விரிவாக விளக்கப்பட்டு இருந்தது.
அடுத்த கட்டம்
இந்த அமைச்சர்களின் வேகத்தை கட்டுப்படுத்த
வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு
மேற்கொண்டால், அ.தி.மு.க., - பாஜ., கூட்டணியின் வெற்றியை, பல
தொகுதிகளில் சொல்லி வைத்தாற்போல் அடிக்கலாம் என்றும் பழனிசாமி
கூறினார். எல்லாவற்றையும்
கேட்டுக்கொண்ட அமைச்சர் அமித் ஷா, தமிழக பா.ஜ.,வுக்கும்,
அ.தி.மு.க.,வுக்கும் இடையிலான உரசல்களை பெரிது பண்ண வேண்டாம்
என்றும், பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடர் முடிந்ததும், அடுத்த
கட்டத்திற்கு செல்லலாம் என்றும் உறுதியளித்தார். இவ்வாறு அந்த
வட்டாரம் கூறியது.
பழனிசாமி பைலில் ஊழல் ஆதாரங்கள்
அமித்
ஷாவிடம் பழனிசாமி அளித்த பைலில், தி.மு.க., அரசின் ஊழல்கள் மற்றும்
அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பான விபரங்கள் இருப்பதாக,
அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து, அக்கட்சிவட்டாரங்கள் கூறியதாவது:
*
ஏற்கனவே பா.ஜ., தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வரும், 'பி.ஜி.ஆர்.,
எனர்ஜி' நிறுவனத்துக்கு, தமிழக அரசு காட்டும் சிறப்பு சலுகைகள்,
ஊழலுக்கு சமமானவை என குறிப்பிட்டிருக்கும் பழனிசாமி, அது
தொடர்பான முக்கியமான ஆவணங்களையும் கொடுத்திருக்கிறார்
*
மின் கொள்முதல், நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள், மின்
வாரியத்துக்கு வாங்கப்படும் பொருட்களில் நடக்கும் தவறுகள்
ஆகியவற்றை பட்டியலிட்டு அளித்திருக்கிறார்
*
'டாஸ்மாக்' நிர்வாகத்தில் நடக்கும் தவறுகள் குறித்தும்,
ஆதாரங்களுடன் அந்த கோப்பு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது
*
வணிக வரி, பத்திரப்பதிவுத் துறை முறைகேடுகள் மற்றும்
போக்குவரத்துத் துறையில் நடக்கும் தவறுகள் எல்லாவற்றையும்
திரட்டி, அமித்ஷாவிடம் அளித்திருக்கிறார் பழனிசாமி.
இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,
தமிழகத்தின் சட்டம் -- ஒழுங்கு குறித்த பல ஆவணங்களும், அமித்
ஷாவிடம் கொடுக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் பல்லடத்தில் நடந்த
படுகொலை சம்பவம் குறித்தும் பேசியிருக்கிறார். போதைப் பொருள்
நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், அது பள்ளி, கல்லுாரிகளில் சர்வ
சாதாரணமாக புழங்குவதாகவும் அமித் ஷாவிடம் புகார்
கூறியுள்ளார்.
'நீட்' விவகாரம், காவிரி பிரச்னையில், தி.மு.க.,
அரசு இரட்டை வேடம் போடுவது குறித்து, பா.ஜ.,வும் - அ.தி.மு.க.,வும்
இணைந்து கூட்டாக பிரசாரம் செய்யலாம் என, பழனிசாமி சொன்ன ஆலோசனையை
அமித் ஷாவும் ஏற்றுள்ளார்.
இப்படி தி.மு.க., அரசு
செயல்பாடுகள், முறைகேடுகள் குறித்து, ஆதாரங்களுடன்
விளக்கமாகச் சொன்னதை குறிப்பெடுத்த அமித்ஷா, 'எதை எப்படி செய்ய
வேண்டும் என முடிவெடுத்து, ஒவ்வொன்றாக செய்யுங்கள்;
ஒவ்வொன்றையும் பெரிதுபடுத்துங்கள்' என, பழனிசாமிக்கு ஆலோசனை
கூறியிருக்கிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.