அப்டேடட் வெர்ஷனில் ஹோண்டா நிறுவனத்தின் சிபி200எக்ஸ் (Honda CB200X) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர மற்றும் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, பண்டிகை காலம் நெறுங்கி வருவதால், தனது புது வரவு பைக்குகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அந்த வகையில் தனது புகழ்பெற்ற மாடலான சிபி200எக்ஸ் பைக்கில் அப்டேடட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ஹோண்டா நிறுவனம், மேம்பட்ட அம்சங்களுடன், ஆக்டிவா, மற்றும் டியோ உள்ளிட்ட பைக்குகளில் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பண்டிகை கால அறிமுகமாக இந்த சிபி200எக்ஸ் அட்வெஞ்சர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
![]()
|
முந்தைய மாடலில் உள்ளதைப் போலவே வழக்கமான 184.04சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினே இந்த வேர்ஷனிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக, 8,500 ஆர்பிஎம்-இல் 17.03 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 15.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். பிஎஸ்6 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப என்ஜின் மாற்றப்பட்டுள்ளது. என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸ் அமைப்பில், அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது.
![]()
|
தோற்ற அமைப்பில், முற்றிலும் அட்வெஞ்சர் ரக பைக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கு, சிங்கிள்-சேனல்-ஏபிஎஸ் வசதிகொண்ட முன் சக்கரத்தில் 276மிமீ பெடல் டிஸ்க்கும், பின்பக்கத்தில் 220மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அட்வெஞ்சர் பைக்குகளுக்கான, பாதுகாப்பான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
![]()
|
தொழில்நுட்ப அம்சங்களாக, ஹோண்டா சிபி200எக்ஸ் மாடலில், 5 நிலைகளில் திரை வெளிச்சத்தை அட்ஜெட் செய்யக்கூடிய முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி லைட்டிங் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில், டெசண்ட் ப்ளூ மெட்டாலிக் பெயிண்ட் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, டெசண்ட் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் நைட்ஸ்டர் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு என்ற 3 பெயிண்ட் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் ஹோண்டா சிபி200எக்ஸ் அப்டேடட் வெர்ஷனின் விலை ரூ.1.47 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.