வசதியான, பாதுகாப்பான பயணத்திற்கு பைக்கின் த்ராட்டில் சரியாக இயங்க வேண்டியது அவசியம். சில சமயங்களில், சில பைக்குகள், ஸ்கூட்டர்களில் இது கட்டுபாட்டை மீறி தானாகவே வேகமெடுக்கும். எதனால் இவ்வாறு ஆகிறது? அந்த சமயத்தில் என்ன செய்வது? போன்றவை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
உங்கள் இருசக்கர வண்டி கட்டுபாடின்றி தானாகவே வேகமெடுக்கிறது என்றால் உடனடியாக அதனை கவனிக்க வேண்டும். இது போன்ற வண்டிகள் மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு உங்களை தள்ளும். ஏனென்றால் நெரிசல் மிகுந்த சாலைகள், சிக்னல்கள், நெடுஞ்சாலைகளில் இவை விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
![]()
|
உங்கள் பைக் அல்லது ஸ்கூட்டர் எவ்வாறு வேகமடைகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். உங்கள் பைக் கேபிள் மூலம் இயக்கப்படலாம் அல்லது மின்னணு முறையில் இருக்கலாம். கேபிள் மூலம் இயக்கப்படும் த்ராட்டில்கள் மிகவும் பொதுவானவை, எலக்ட்ரானிக் முறையில் இயக்கப்படும் த்ராட்டில்களும் இப்போது பரவலாகி வருகின்றன. உங்கள் பைக் எந்த வகையான த்ராட்டில் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
கேபிள் முறையிலான த்ராடில் என்பது கருப்பு கேபிள் த்ராடில் பாடியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆக்சலரேட்டரை முறுக்கும் போது எஞ்சினுக்குள் காற்றை அனுமதிக்க த்ரோட்டில் பாடி திறக்கும். இந்த கேபிளை அவ்வப்போது சர்வீஸ் செய்ய வேண்டும். இவை தூசி, புழுதியினால் மாசடையும். அதனால் ஒட்டிக்கொள்ளும். நீங்கள் ஆக்சலரேட்டரை திருகாவிட்டாலும், த்ராட்டில் பாடியைத் திறந்து வைத்திருக்கும். த்ராட்டிலை விட்டுவிட்டாலும் உங்கள் மோட்டார் சைக்கிள் வேகமெடுக்கும்.
![]()
|
வண்டி வாங்கி நீண்ட காலம் வெளியிலேயே நிறுத்தப்பட்டிருந்தால், கேபிளில் அரிப்பு ஏற்பட்டிருக்கும். இந்த கேபிளை புதியதாக மாற்றிவிடுங்கள். 300 ரூபாய்க்குள் தான் வரும். எலக்ட்ரானிக் ஆக்சுவேட்டட் த்ராட்டில்களில் சென்சார் பிரச்னையால் த்ராட்டில் பாடியை திறக்கும், மூடும் செயல் மோசமாகலாம். இதனால் பைக் தானாகவே முடுக்கமடையும். தொழில்நுட்ப வல்லுநர் உதவியுடன் இதனை சரிசெய்யலாம். உயர் ரக பைக்குகளில் தான் இது இருக்கும்.