* திங்களன்று, வர்த்தக நேரத்தின் இடையே, நிப்டி 20000 என்ற நிலையை கடந்து சென்று, நாளின் இறுதியில் 19996 என்ற நிலையில் நிறைவடைந்தது
அன்று நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்பால், பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு 324 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை தொட்டது. உள்நாட்டு மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில பங்குகளை தொடர்ந்து வாங்கி வருவதால் தான் இந்த ஏற்றம் நடந்தது எனலாம்.
ஆனாலும், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் தொடரும் ஏற்றம், வலுவான அடிப்படை காரணங்கள் ஏதுமில்லாமல் இருப்பது, கொஞ்சம் கவலையளிப்பதாகவே இருந்தது. நிப்டி ஸ்மால் கேப் 100 மற்றும் நிப்டி மிட்கேப் குறியீடுகளில் இருக்கும் பங்குகளின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு, நிப்டி 50 குறியீட்டில் இருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பில் முப்பத்தி ஒன்பது சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது, கடந்த பத்து ஆண்டுகளின் உச்சபட்ச நிலையாகும்.
* செவ்வாயன்றும், வர்த்தக நாளின் இடையே, புதிய உச்சத்தை நிப்டி தொட்டது. ஆனால், வர்த்தகத்தின் இறுதியில், மூன்று புள்ளிகள் இறக்கத்தில் நிறைவடைந்தது. அதேநேரம், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள், அதிக வீழ்ச்சியை கண்டன
* புதனன்று முதன்முறையாக நிப்டி, 20000 என்ற நிலைக்கு மேல், வர்த்தக நாளின் இறுதியில் நிறைவடைந்தது. ஆகஸ்ட் மாத மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., முதலீடு 15,814 கோடி
ரூபாயாக இருந்தது என்ற தகவல் வெளியானது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள், முந்தைய நாள் சந்தித்த வீழ்ச்சியிலிருந்து சற்று மீண்டன
* வியாழனன்று, நிப்டி 20167 என்ற உச்சத்தை தொட்டுவிட்டு, 20103 என்ற அளவில் நிறைவடைந்தது. லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் காட்டிவரும் ஆர்வமே, இந்த ஏற்றத்திற்கு காரணமாக இருந்தது எனலாம்
* வெள்ளியன்று, நிப்டியின் ஏற்றம் தொடர்ந்து 20222 என்ற புதிய உச்சத்தை தொட்டுவிட்டு, 20192 என்ற அளவில் நிறைவடைந்தது. இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பே, முதலீட்டாளர்கள் பார்வையை, இந்தியா மீது நிலைக்க செய்கிறது. இது
சந்தையில் முதலீட்டை அதிகரிக்க செய்வதால், இந்த ஏற்றம் தொடர்கிறது எனலாம்.
வரும் வாரம்
* எம்3 மணி சப்ளை, வங்கிகளின் வைப்பு நிதி மற்றும் கடன்களின் வளர்ச்சி,
அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளிட்ட சில இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்கின்றன
* கட்டடங்கள் கட்டுவதற்காக வழங்கப் பட்ட புதிய அனுமதிகளின் எண்ணிக்கை, பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, வீடுகள் விற்பனை, எஸ் அண்டு பி., குளோபல் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு உள்ளிட்ட சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
* செவ்வாயன்று சந்தை விடுமுறை என்பதால், நான்கு வர்த்தக நாட்களைக் கொண்ட
வாரமாக இந்த வாரம் இருக்கப் போகிறது
* அமெரிக்க வட்டிவிகித முடிவு, சந்தையின் போக்கை ஓரளவு மாற்றியமைக்க வல்லமை கொண்டது என்பதால், அறிவிப்பு வெளிவரும் முன்னால், அது குறித்த எதிர்பார்ப்பும்; அறிவிப்பு வந்தவுடன் அதனால் ஏற்படும் மாற்றங்களும், சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
* வாரத்தின் இறுதியில் செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையை வழிநடத்த வாய்ப்பு
இருப்பதால், அந்த இரண்டு நாட்களிலும், அவற்றின் மீது கவனம் வைத்தே, வர்த்தகர்கள் செயல்பட வேண்டியிருக்கும்.
கடந்த வாரத்தில், மூன்று நாட்கள் கணிசமான ஏற்றம், ஒரு நாள் சுமாரான ஏற்றம் மற்றும் ஒரு நாள் மிகச் சிறியதொரு இறக்கம் என்ற அளவில் இருந்தது நிப்டி. டெக்னிக்கலாக ஏற்றம்
தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பது தோற்றமே நிப்டியில் நிலவுகிறது.
அமெரிக்க வட்டிவிகித முடிவுகளும், அதன் பின் வரும் செய்திகளுமே சந்தையின் அடுத்த கட்ட நகர்வினை நிர்ணயிக்கும் என்பதை, வர்த்தகர்கள் நினைவில் வைத்துக்கொண்டே வர்த்தகம் செய்யவேண்டும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 19964, 19736 மற்றும் 19600 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 20321, 20450 மற்றும் 20587 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் ஏற்றம் தொடர்வதற்கு, தற்போதைய முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 20093 என்ற அளவிற்கு மேல் தொடர்ந்து நிப்டி வர்த்தகமாக வேண்டும்.
பங்கு விலை/வால்யூம், குறியீடுகள் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்தும், ரிக்கார்டு தேதிகள் குறித்த தகவல்கள் www.bseindia.com இணையதளத்தில் இருந்தும்
திரட்டப்பட்ட நாள்: செப்டம்பர் 15 - 16, 2023