கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் கூட்டாளிகள், 18 பேரின் வீடுகள் உட்பட தமிழகம் மற்றும் தெலுங்கானாவில், 31 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சல்லடை போடும் விதமாக சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். கோவை அரபி கல்லுாரியில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு அக்., 23ம் தேதி, குண்டு வெடித்து கார் சிதறியது. இந்த காரை ஓட்டிச் சென்ற, அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின், 29, எனும் ஐ.எஸ்., பயங்கரவாதி உயிரிழந்தார்.
மூளைச் சலவை
இச்சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஜமேஷா முபின் தலைமையில், மிகப்பெரிய, 'நெட் ஒர்க்' செயல்பட்டது தெரிய வந்தது.முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆயுத பயிற்சி அளித்துள்ளார். இவர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தென் மண்டல தலைவராக செயல்பட்டதும் தெரிய வந்தது. இவரது வீட்டில் வெடி மருந்து, பயங்கரவாத சதி திட்டம் தொடர்பாக புத்தகங்கள், ஐ.எஸ்., இயக்கத்தின் கொடி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன் உள்ளிட்ட, 'டிஜிட்டல்' ஆவணங்களை ஆய்வு செய்த போது, தாக்குதல் நடத்த வேண்டிய ஹிந்து கோவில்கள், கொலை செய்ய வேண்டிய ஹிந்து அமைப்பு தலைவர்களின் பெயர்கள் இருந்தன. மேலும், கோவை குனியமுத்துாரில் உள்ள அரபி கல்லுாரியில் பயின்றுள்ளார். அங்கு தன்னுடன் பயின்றவர்களுக்கு பயங்கரவாதம் தொடர்பாக பயிற்சி அளித்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 13 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜமேஷா முபினுடன் அரபி கல்லுாரியில் பயின்ற கோவையைச் சேர்ந்த, 18 பேரின் வீடுகள் உட்பட, தமிழகம் மற்றும் தெலுங்கானாவில், 31 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று காலை 6:00 மணியில் இருந்து, சல்லடை போடும் விதமாக சோதனையில் ஈடுபட்டனர்.சோதனைக்காக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து வந்திருந்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நான்கு பேர் வீதம், 22 பேரின் வீடுகளுக்கு சென்றனர்.
கோடை கரும்புக்கடை ஆப்பிள் கார்டனைச் சேர்ந்த முகமது ஆசிப், 32, பொன்னையாராஜபுரத்தை சேர்ந்த முகமது சையான், 35, கவுண்டம்பாளையம் பியூன்ஸ் காலனியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், 50, கரும்புக்கடை அப்துல் ரகுமான், 30, ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், இடையர்பாளையம் சையது முஸ்தபா, 30, ரோஸ் கார்டனைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா, 42, சம்சுதீன், 32, பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்த அம்ஜத் அலி கான்,31, ஜி.எம்., நகரைச் சேர்ந்த அபுதாகீர், 33, ஆகியோரின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆயுத பயிற்சி?
அதேபோல, கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த மஸ்தான், 38, உக்கடம், போத்தனுார், கரும்புக்கடை பகுதிகளைச் சேர்ந்த முகமது ஹசன், 26, பர்னாஸ், 33, அலி ஷேக் மன்சூர், 34, ஹசன், 33, சுகைன், 44, முகமது யாசின், 41, ஆகியோரின் வீடுகளிலும் சோதனை செய்தனர்.மற்றொரு முகமது ஹசன், 32; ஜவகர், சர்ஜுன், 35; அசாருதீன், 29, ஆகியோர் வீடுகளிலும், கோவை மாநகராட்சி, 82வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முபசீராவின் கணவர் ஆரிப் மற்றும் உக்கடம் ஜி.எம்., நகரைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் தமிமுன் அன்சாரி வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
தமிமுன் அன்சாரி வீட்டில் அதிகாரிகளை அனுமதிக்க மறுத்து, உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதற்கெல்லாம் அசராமல் வீட்டிற்குள் புகுந்து சோதனையில்
ஈடுபட்டனர்.
சோதனை நடத்தப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ள, 22 பேரில், 18 பேர், குனியமுத்துாரில் உள்ள அரபி கல்லுாரியில், ஜமேஷா முபினுடன் பயின்றவர்கள்.இந்த கல்லுாரியில் ஜமேஷா முபின் மற்றும் இவரது கூட்டாளிகளான பயங்கரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி, வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டதா என்பது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தென்காசி பொறியாளர்தென்காசி மாவட்டம், கடையநல்லுார் ரசாலிபுரத்தில் வசிப்பவர் முகமது இத்ரிஸ், 25; பொறியாளர். வீட்டில் இருந்தபடி, சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று காலை, 5:30 மணியில் இருந்து சோதனை நடந்தது. மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.60 லட்சம் ரொக்கம் பறிமுதல்
சோதனை குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததை முறியடிக்கும் விதமாக, தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், 31 இடங்களில் சோதனையில் ஈடுபட்டோம்.
தமிழகத்தில், கோவையில், 22; சென்னையில், 3 மற்றும் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், சைபராபாத் உட்பட, 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஹார்டு டிஸ்க்குகள் என, டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்து வருகிறோம்.சதித் திட்டத்தை நிறைவேற்ற வைத்திருந்த, 60 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 15 லட்சம் ரூபாய்க்கான அமெரிக்க டாலர்கள், அரபு மொழியில் எழுதப்பட்ட, பயங்கரவாதம் தொடர்பான புத்தகங்கள் என, ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம்.
சோதனையில், கோவை கார் குண்டு வெடிப்பு ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபின் மற்றும் இவரது கூட்டாளிகள் அரபி மொழி கற்றுக் கொள்வது போல, பயங்கரவாத செயல்களுக்கு பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள், வாட்ஸாப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்துஉள்ளனர். 'கிலாபத்' எனும் சித்தாந்தத்துடன் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு, நாட்டின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்தனர் என்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் -