சென்னை: முறைகேடுகளை முழுமையாக கண்டு அறிவதில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த, 'தி சொசைட்டி ஆப் ஆடிட்டர்ஸ்' சங்கத்தின் 90வது ஆண்டு
விழாவில் அவர் பேசியதாவது:
வரும் 2047ல் நாடு சுதந்திர நுாற்றாண்டை கொண்டாடும் போது நம் நாடு வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். மாநிலங்களின் வளர்ச்சி
எங்கிருந்து நல்ல ஆலோசனைகள், நல்ல கருத்துக்கள் வந்தாலும் அவை நாட்டுக்கு நல்லது என்றால் செயல்படுத்தி வருகிறார்.அனைத்து மாநிலங்களும் முன்னேறினால் தான் நம் நாடு வளர்ந்த நாடாக மாறும். ஒரு மாநிலம் பின்தங்கினாலும் நாம் வளர்ந்த நாடாக மாறாது.
அதனால் தான் எந்த மாநிலத்தையும் ஒதுக்காமல் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கு
சமமாக தேவையான உதவிகளை பிரதமர் மோடி செய்து வருகிறார்.கடந்த 9.5 ஆண்டு கால மோடி ஆட்சியில் பாரதத்தை வளர்ந்த நாடாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
உள்ளன. கொரோனா பேரிடர் காலத்தில் மோடி அரசின் செயல்பாடுகள் மக்களை காத்தன.
கொரோனாவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. புதிய தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. அதனால் தான் இன்று வளர்ச்சிப் பாதையில் செல்லும் நாடாக நம் நாடு உள்ளது.
பங்களிப்பு
நாட்டின் முன்னேற்றத்தில் ஆடிட்டர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஆடிட்டர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தொழில், முதலீடு ஆலோசனைகளை வழங்க முடியும்.
அரசுக்கு வர வேண்டிய வருவாய் வராமல் இருப்பதை தடுக்கவும், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பில்லாத வகையில் ஆலோசனைகளை கூறலாம். அதனால் அரசின்
வருவாய் அதிகரிக்கும். நாடு முன்னேறும்.கணக்குகளை தணிக்கை செய்வதிலும், அரசை ஏமாற்றி முறைகேடுகள் செய்பவர்களை கண்டறிவதிலும் ஏ.ஐ., தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நுால் கிடைத்தால் போதும், அதன் வலைப்பின்னல் முழுவதையும் ஏ.ஐ., தொழில்நுட்பம் கண்டுபிடித்து விடுகிறது.
ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக கிடைக்கும் ஆதாரங்களை கொண்டு வந்து தான், ஒருவர் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்த முடிகிறது. உண்மையை கண்டறிய வெளி
மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட சோதனை நடத்த முடிகிறது.
மாற்ற முடியும்
அறுபது ஆண்டு கால காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என்று சொல்லி எந்தப் பலனும் இல்லை. ஆடிட்டர்கள் மட்டுமல்ல அனைத்து துறையினரும் அவரவர் கடமைகளை சரியாக செய்தால், அடுத்த, 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற முடியும். சிறு தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேறும். மின்னணு சந்தை வாயிலாக இன்று உலகெங்கும் வணிகம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கான வாய்ப்புகளை மோடி அரசு
உருவாக்கியுள்ளது.இவ்வாறு அவர்பேசினார்.
தி சொசைட்டி ஆப் ஆடிட்டர்ஸ் சங்க தலைவர் அனுஷா சீனிவாசன், செயலர் ராமசுவாமி
உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
'மற்ற மதங்களை விமர்சிக்க முதுகெலும்பு இருக்கிறதா?'
''மற்ற மதங்களை விமர்சிக்க முதுகெலும்பும், தைரியமும் இல்லாதவர்கள், ஹிந்து மதத்தை அழிப்போம் என்கின்றனர்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் ஆடிட்டர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது
சட்டவிரோதமானது. அமைச்சராக பதவி ஏற்கும் போது, அவர் எடுத்துக்கொண்ட
பிரமாணத்துக்கு எதிரானது.
சனாதனத்திற்கு எதிராக, அதாவது ஹிந்து மதத்திற்கு எதிராக பேசும்போது, ஹிந்து
அறநிலையத் துறையை காக்க வேண்டிய அமைச்சரும் உடன் இருந்துள்ளார். என்ன தான் கொள்கை என்றாலும், எந்த ஒரு மதத்தையும் அழிக்க வேண்டும் என்று சொல்ல, யாருக்கும் உரிமை இல்லை.
யாருடைய நம்பிக்கையையும் காயப்படுத்தக் கூடாது. கோடிக்கணக்கான மக்கள் கடவுளாக வழிபடும் ராமருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினர். அதைக் கூட, இங்கு
வன்முறையால் யாரும்எதிர்கொள்ளவில்லை. அதுதான்சனாதனத்தின் சிறப்பு.
வேறு மதங்களை விமர்சிக்க தைரியம் இல்லாதவர்கள், ஹிந்து மதத்தை ஒழிப்பேன் என்கின்ற னர். அவர்களுக்கு மற்ற மதங்களை விமர்சிக்க முதுகெலும்பு இருக்கிறதா? வேறு மதத்தை பற்றி இப்படி பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
தி.மு.க.,வின் கொள்கை தமிழகத்தில் அனைவருக்கும் தெரியும். ஹிந்து மதத்தை ஒழிப்பேன் என்றால், அதற்கு எதிர்வினை வரத்தான் செய்யும். ஹிந்து மதம் வன்முறைக்கு எதிரானது.
அதனால், வன்முறையை துாண்டும் வகையில் யார் பேசினாலும் ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.