வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கடந்த ஆகஸ்ட் 11-ல், பார்லிமென்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷவா' ஆகிய மூன்று மசோதாக்களை தாக்கல் செய்தார்.
நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில், 1860-ல் கொண்டு வரப்பட்ட இந்திய குற்றவியல் சட்டம், 1898-ல் கொண்டு வரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1872-ல் கொண்டு வரப்பட்ட இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாகவே, புதிய சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திரம் அடைந்து, 76 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டோம். ஆனால், பல்வேறு விஷயங்களில் நம்மை அடிமைப்படுத்திய, பிரிட்டன் நடைமுறைகளையே இன்றும் பின்பற்றி வருகிறோம். 55 ஆண்டுகள் பாரதத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு, நம் வரலாறு, கலாசாரத்தின்படி அரசு நடைமுறைகளை மாற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; அது பற்றிய சிந்தனையே அவர்களுக்கு இல்லை.
'கடமை பாதை'
பாரத நாட்டின் நிதிநிலை அறிக்கை கூட, பிரிட்டனில் இருப்பவர்களுக்கு வசதியாக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மாலை நேரத்தில்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
மத்தியில் பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைந்து, வாஜ்பாய் பிரதமரான பின்தான், நம் நாட்டிற்கேற்ப காலை 11:00 மணிக்கு, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் வழக்கம்
உருவானது.
அதுபோல, நம் நாட்டில் பல நகரங்கள், தெருக்களின் பெயர்கள் கூட, அடிமைச் சின்னங்களாக இருந்தன. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின்தான், அவை மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருகின்றன.
சுதந்திரம் அடைந்து, 75ஆண்டுகளுக்குப் பின்தான், டில்லியின், 'இந்தியா கேட்' பகுதியில், ஆங்கிலேய ஆட்சியின் அடையாளமாக இருந்த இடத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை வைக்கப்பட்டது. அந்தப் பகுதிக்கு, 'கடமை பாதை' என பெயர் சூட்டப்பட்டது.
அந்த வரிசையில், இந்திய குற்றவியல் நீதி முறையில், மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில், மூன்று புதிய சட்ட மசோதாக்களை, மத்திய பா.ஜ., அரசு, பார்லிமென்டில் அறிமுகம் செய்துள்ளது. 18 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள், 16 உயர் நீதிமன்றங்கள், 5 நீதித்துறை அகாடமிகள், 22 சட்ட பல்கலைகள், 142 எம்.பி.,க்கள், 270 எம்.எல்.ஏ.,க்கள், இந்த புதிய சட்டங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிர விவாதங்கள் நடந்தன. 158 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு ஜனநாயக வழியைப் பின்பற்றி, இந்த சட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்திய குற்றவியல் சட்டம் - சி.ஆர்.பி.சி.,க்கு மாற்றான, 'பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா' சட்டம் 533 பிரிவுகளைக் கொண்டுள்ளது. பழைய சட்டத்தின் 160 பிரிவுகள் மாற்றப்பட்டு, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் - ஐ.பி.சி.,க்கு மாற்றான, 'பாரதிய நியாய சன்ஹிதா' சட்டத்தில், முன்பு இருந்த 511 பிரிவுகளுக்குப் பதிலாக, 356 பிரிவுகள் இருக்கும். இதில் 175 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன; 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, 22 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
டிஜிட்டல் பதிவுகள்
இந்திய சாட்சிய சட்டத்திற்கு மாற்றான, 'பாரதிய சக்ஷவா' சட்டத்தில் 170 பிரிவுகள் உள்ளன. இதில் இரண்டு பிரிவுகள் மாற்றப்பட்டு, ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது; 5 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட சட்டப் பிரிவுகள், அடிமைத்தனத்தின் அடையாளங்கள் இருந்தன.
புதிய சட்டங்களில், முதல் தகவல் அறிக்கை முதல், வழக்கு டைரி, குற்றப்பத்திரிகை, தீர்ப்பு வரை அனைத்தும் நடைமுறைகளும், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பதிவுகள், கணினி சர்வர் பதிவுகள், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், இணையதளங்கள் ஆகிவற்றையும் ஆவணங்களாக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தேடுதல், பறிமுதல் செய்யும்போது, வீடியோ பதிவு செய்வது, புதிய சட்டங்களில் கட்டாயமாகி உள்ளது. இதனால், அப்பாவி மக்களை, எந்தவொரு வழக்கிலும்
சிக்க வைக்க முடியாத நிலை உருவாகும்.
குற்றங்கள் நடந்த இடங்களில், தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி, ஆதாரங்களை சேகரிப்பது கட்டாயமாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில், 90 நாட்களுக்குள் புகாரின் நிலையை, காவல் துறை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால், வழக்குகளை
விரைவாக முடிக்க முடியும்.
மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைக்குள் வரும் வழக்குகளை, விரைவாக முடிக்க நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. 60 நாட்களுக்குள் வாதங்களை முடித்து, 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்.
இதனால், பல ஆண்டுகள் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலை மாறும். அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளில், 120 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும்.
இல்லையெனில் விசாரணையை தொடங்கவும், புதிய சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மரண தண்டனை
பாலியல் வன்கொடுமை வழக்குகளில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 18 வயதுக்குட்பட்ட சிறுமியரை கொன்றால் மரண தண்டனை, கும்பலாக சேர்ந்து ஒருவரை கொன்றால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ஆயுள் தண்டனை, மரண தண்டனை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், புதிய சட்டங்களில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரசியல் ஆதாயங்களுக்காக குற்றவாளிகளை விடுதலை செய்வது, நம் நாட்டில் சகஜமாக நடந்து வருகிறது.
புதிய சட்டங்களின்படி மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மட்டுமே குறைக்க முடியும். எந்த குற்றவாளியையும் முன்கூட்டியே விடுதலை செய்ய
முடியாது.
புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், தேச துரோக சட்டம் முழுமையாக ரத்தாகும். குற்றவாளிகள் உலகின் எந்த நாட்டுக்கு தப்பி ஓடினாலும், அவர் இந்திய சட்டத்தைதான் பின்பற்ற வேண்டும். புதிய சட்டங்களின்படி, யார் வேண்டுமானாலும் மூன்று ஆண்டுகளுக்குள் நீதியைப் பெற முடியும்.
சட்டம் என்பது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக மட்டும் இருக்கக் கூடாது. எந்தவொரு குற்றத்திற்கும் அதற்கேற்ப தண்டனை
அவசியம்தான்.
அதே நேரத்தில் சட்டம் என்பது, பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதாக இருக்க வேண்டும். குற்றங்கள் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். புதிய சட்டங்கள் வாயிலாக, இதெல்லாம் நிறைவேறும்.
ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தும், தண்டனையை மட்டுமே நோக்கமாக கொண்டவை. ஆங்கிலேய அரசைக் கண்டு, மக்கள் அஞ்ச வேண்டும் என்பதே, அவர்களின் நோக்கமாக இருந்தது.
மக்களவையில் இதை சுட்டிக்காட்டிய அமித் ஷா, 'புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்களும், நீதி கிடைப்பதை உறுதி செய்பவை. இதன் வாயிலாக, நாட்டு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்றார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் வழக்கம்போல, இந்த சட்டங்களை எதிர்க்கின்றன. இந்த மூன்று சட்டங்களுக்கும் ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களுக்கு நலன் பயக்கும் சட்டம் என்றாலும், ஹிந்தியை வைத்து அரசியல் செய்கிறது, தி.மு.க.,
இப்போது நடப்பது நவீன தகவல் தொழில்நுட்ப யுகம். குற்றங்கள் புதிய புதிய வடிவங்களை எடுத்துள்ளன. மக்கள்தொகையும் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால், நீண்ட காலத்திற்கு முன்பு இயற்றப்பட்ட சட்டங்களால், மக்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதில்லை; மக்களுக்கு பாதுகாப்பும் கிடைப்பதில்லை.
புதிய சட்டங்கள்
இந்த குறைகளை சரி செய்து, காலத்திற்கேற்ப மாற்றங்களை செய்யவே, புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் இதையும் எதிர்க்கின்றன.
நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சி, குடிமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்தல், பிரிவினை சிந்தனையை வேரறுத்தல், நவீன தொழில்நுட்ப காலத்திற்கேற்ப மாற்றங்களை செய்தல், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுத்தல், சமத்துவம் ஆகிய உன்னத நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, ஆங்கிலேயர் கால சட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பது, இந்த மண்ணின் மொழியில் பெயர் வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமே தவிர, வேறு எதுவும் இல்லை.
ஹிந்தியில் பெயர் வைப்பதை எதிர்க்காமல், நம் அன்னை தமிழ் உள்ளிட்ட மற்ற பாரதிய மொழிகளிலும் பெயர் வைக்குமாறு கோரிக்கை
வைக்கலாம்.
மாறாக, அன்னிய ஆங்கிலத்திற்காக குரல் கொடுப்பதை ஏற்க முடியாது. சுதந்திரம் அடைந்து, இப்போதுதான் பாரதம் மீண்டும் பாரதமாக மாறிக் கொண்டிருக்கிறது.
அதை உறுதிப்படுத்தவே சட்டத் துறையிலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு
உள்ளன. இதை நாட்டு மக்கள்
நன்கறிவர்.
வானதி சீனிவாசன், வழக்கறிஞர், தேசியத் தலைவர், பா.ஜ., மகளிர் அணி.