சாதனை எளிதில் கிடைத்துவிடுவதில்லை. இலக்கை எட்டுவதற்கு முன் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் சந்தித்த சவால்களும்; சமாளித்த வேதனைகளும். சாதனை பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் நமக்கு ஆயிரமாயிரம் அனுபவங்கள் கொட்டிக் கிடக்கும். அத்தகைய அனுபவங்களுக்கு சொந்தக்காரராக ஜொலிப்பவர் தான் மதுரையின் 'உயர்ந்த மனிதர்' உடற்கல்வி ஆசிரியர், காட்வின் வேதநாயகம் ராஜ்குமார். முதன்முறையாக உடற்கல்வி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ள காட்வின் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம்...
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்றது போல் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களின் சாதனைகளாலும் பெருமை அடைந்து கொண்டிருக்கிறது, அலங்காநல்லுார். அந்த பள்ளியே என் சாதனைகளுக்கு பிள்ளையார் சுழி. 25 ஆண்டுகளாக இப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக உள்ளேன். பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறேன்.
அதற்கு கிடைத்த அங்கீகாரம் தான் 2013ல் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது, 2014ல் மாநில நல்லாசிரியர் விருது, இப்போது தேசிய நல்லாசிரியர் விருது. ஒவ்வொரு விருதும் மாணவர்களின் வளர்ச்சிக்காகவே என்னை சிந்திக்க வைக்கிறது.இவ்விருது பெற டில்லிக்கு சென்றபோது பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாக ஒரு மணிநேரம் பேசினார். புதிய கல்விக் கொள்கை, அவரது பள்ளி அனுபவங்களை பகிர்ந்துகொண்டாலும் ஆசிரியர் - மாணவர் உறவு குறித்து அவர் கூறியது மனதில் பசுமையாக நிற்கிறது.'ஆசிரியர் - மாணவர்கள் உறவு படிக்கும் காலத்தில் மட்டுமல்லாமல், வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும்' என்பது தான்.
அவரது வார்த்தையை பல ஆண்டுகளாக பின்பற்றி வந்துள்ளேன். என்னால் ராணுவம், போலீஸ், உடற்கல்வி ஆசிரியர் பணியில் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் இன்றும் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் வீட்டு விசேஷங்கள் நான் இல்லாமல் நடக்காது. ஆசிரியர் - மாணவர் உறவில் நான் பின்பற்றுவதை பிரதமர் பேசி கேட்டபோது என் உடல் சிலிர்த்ததை உணர்ந்தேன்.
விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து பெறும் போது பெற்றோர், நான் நம்பும் கடவுள், எனக்கு வாய்ப்பளித்த பள்ளிக்கு நன்றி கூறிக்கொண்டேன். மத்திய அரசின் நல்லாசிரியர் விருது தேர்வு ஆழமாகவும், நுட்பமாகவும் இருந்தது. 2018 முதல் முயற்சி செய்து 6வது முறையாக இவ்விருதுக்கு தேர்வு பெற்றேன்.
முன்னாள் கலெக்டர் ஜவஹர் முயற்சியால் பள்ளிக்கு ரூ.3 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம், ரூ.2 லட்சத்தில் பாக்ஸிங் மேடை, அமைச்சர் மூர்த்தி முயற்சியால் ரூ.7 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கருவிகள், நீச்சல்குளம் பள்ளிக்கு கொண்டுவர காரணமாக இருந்தேன்.
பள்ளிகளில் வாலிபால், கபடி தடகளம் மட்டுமே உடற்கல்வி விளையாட்டாக இருந்த நிலையில் 2003ல் கிடைத்த வாய்ப்பில், குத்துச்சண்டை, வாள் சண்டை, நீச்சல், ஜூடோ, ஸ்குவாஷ், டேக்வாண்டோ, கிக் பாக்சிங் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தினேன். இவ்விளையாட்டுகளில் மாணவர்கள் மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்கின்றனர்.
டேக்வாண்டோ கிக்கிங்ஸ், ஜம்பிங் ஜாக், கை சிலம்பம் ஆகியவற்றில் 2 கின்னஸ், ஒரு உலக சாதனை நிகழ்த்தியுள்ளோம். பிஸிக்கல் பிட்னஸ் போட்டியில் நான் 'ஏசியன் ரெக்கார்டு' செய்துள்ளேன்.
மாநில, தேசிய போட்டிகளுக்கு செல்லும்போது அரசு பள்ளி மாணவர்கள் என்று இளக்கார பார்வை இன்றும் உள்ளது. இருந்தாலும் போராடி வெற்றிகளை குவித்துள்ளோம்.
மதுரைக்கு ஒரே ரேஸ்கோர்ஸ் போல், மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டு மைதானம் வேண்டும். 400 மீட்டர் ஓட்டம் டிராக் வசதியுடன் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், ஸ்போர்ட்ஸ் விடுதி என வசதி ஏற்படுத்தி கொடுத்தால் தமிழகத்திலும் ஏராள மாணவர்கள் மீது ஒலிம்பிக் வெளிச்சம் படும். இதுவே, விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் லட்சியமாக இருக்க வேண்டும் என்றார், நம்பிக்கையாக.
இவரை வாழ்த்த 94435 01657.