புதுடில்லி: டில்லி யஷோபூமி, துவாரகாவில் இன்று(செப்., 17) பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். 18 வகையான பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைப்பொருள் தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள். நிகழ்ச்சியில் விஸ்வரகர்மா திட்ட பயனாளிகளை அங்கீகரிப்பதும், ஆதரிப்பதும் காலத்தின் கட்டாயமாகும் என பிரதமர் மோடி பேசினார்.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி இன்று(செப்.,17) கொண்டாடப்படுகிறது. டில்லி யஷோபூமி, துவாரகாவில் இன்று(செப்., 17) பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
காலத்தின் கட்டாயம்
பல்வேறு கலைஞர்கள், கைவிஞர்களுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களையும் பிரதமர் மோடி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கைவினைஞர்கள், கலைஞர்களின் நம்பிக்கை தரும் வகையில் விஸ்வகர்மா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. விஸ்வகர்மா திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.13ஆயிரம் கோடி செலவிட உள்ளது. திட்ட பயனாளிகளை அங்கீகரிப்பதும், ஆதரிப்பதும் காலத்தின் கட்டாயமாகும். விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுக்கு நவீன கருவிகளை இயக்குதல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலத்தில் விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். இன்று இந்தியாவிற்கு யஷோபூமி என்ற சர்வதேச கண்காட்சி மையம் அர்ப்பணிக்கப்பட்டது. தேசத்தின் ஒவ்வொரு விஸ்வகர்மாவிற்கும் இந்த மையம் உதவியாக இருக்கும். இந்திய கலை மற்றும் கைவினைப் பொருட்களை உலக அளவில் அடைய இது ஒரு துடிப்பான மையமாக இருக்கும். உள்ளூர் தயாரிப்புகளை உலகளவில் உருவாக்குவதில் இது பெரும் பங்கு வகிக்கும்.
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன். விஸ்வகர்மா உறுப்பினர்களுடன் இணையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாரத் மண்டபம் மற்றும் யஷோபூமி ஆகியவை டில்லியை மாநாட்டு சுற்றுலாவின் மிகப்பெரிய மையமாக மாற்றும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விஸ்வகர்மா திட்டம்
விஸ்வகர்மா திட்டம் என்பது பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணைபவர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மற்றும் உதவித்தொகை ரூ.500 நாள் ஒன்றுக்கு வழங்கப்படும்.
தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.
இந்த விஸ்வகர்மா திட்டம் 2023 முதல் 2028ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் 18 வகையான பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைப்பொருள் தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள்.
பயன் யாருக்கு?
தச்சர், படகு தயாரிப்பாளர், கவசம் செய்பவர், கொல்லன், கூடை மற்றும் பாய் தயாரிப்பவர், தேங்காய் நெசவாளர், பொம்மை தயாரிப்பாளர், பொற்கொல்லர், குயவன், காலனி தொழிலாளி, சுத்தியல் மற்றும் கருவித் தொகுப்பு தயாரிப்பாளர், கல் செதுக்கி சிற்பி தயாரிப்பாளர், கல் உடைப்பவர், முடி திருத்துபவர், மலர் மாலை தயாரிப்பாளர் சலவை செய்பவர், தையல் காரர், மீன்பிடி வலை தயாரிப்பார் ஆகியோர் பயன் அடைவார்கள்.

மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி
டில்லி 'யஷோபூமி துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தில், விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதை நீட்டிக்கப்பட்டுள்ளதை திறந்து வைத்தார். மெட்ரோ ஊழியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி மகிழ்ந்தார். பின்னர் அவர், டில்லி மெட்ரோவில் பயணம் செய்தார். அப்போது பயணிகள் பிரதமர் மோடியுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்து கொண்டனர்.

கண்காட்சி மையத்தில் மோடி
டில்லியில் துவாரகாவில் யஷோபூமி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை (International Convention And Expo Centre) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அமரக்கூடிய மாநாட்டு மையம், 15 மாநாட்டு அறைகள், பெரிய அளவிலான அரங்குகள் மற்றும் 13 கூட்ட அறைகளைக் கொண்டுள்ளது.
சுமார் ரூ.5,400 கோடி செலவில் 8.9 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை பிரதமர் மோடி சுற்றி பார்த்தார். விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, கண்காட்சி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த விஸ்வகர்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி டில்லியில், காலணி தொழிலாளிகள், தையல் காரர்கள் மற்றும் கைவினைஞர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி அவர்கள் தயாரித்துள்ள பொருட்களை கையில் வாங்கி பார்த்து, விளக்கத்தை கேட்டறிந்தார்.