ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் (fiber optic technology) பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல், மருத்துவம், தொலைத்தொடர்பு, ராணுவம் என பல துறைகளில் இந்த அதிநவீன கேபிள்கள் மூலம் சிக்னல்கள் கடத்தப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஃபைபர் ஆப்டிக் கேபிள் மூலமாக இணைய சேவை கொடுக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பழைய காப்பர் கேபிள்களைக் காட்டிலும் பன்மடங்கு வேகத்தில் ஃபைபர் ஆப்டிக் கேபிள் மூலம் இணையத் தொடர்பு கிடைத்தது. இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு துவங்கி ஃபைபர் ஆப்டிக் கேபிள் கொண்டு தொலைத்தொடர்பு சேவை நிறுவப்பட்டது.
ஒருகாலத்தில் நாம் ஒரு ஜிபி டேட்டாவை ஒரு மாதம் முழுக்க வைத்துப் பயன்படுத்தி இருப்போம் அல்லவா? அப்போது ஏர்டல், ஐடியா, யுனினார், ஏர்செல், பிஎஸ்என்எல், டொகொமோ என பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஃபைபர் ஆப்டிக் கேபிள் மூலம் இணையத் தொடர்பை ஏற்படுத்தின. ரிலையன்ஸ் ஜியோ சிம் வருகைக்குப் பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கி ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா என்கிற அதிவேக இணைய சேவை சாத்தியமானது. ஒரு விநாடிக்கு ஒரு எம்பி டேட்டா வேகம் கிடைக்காதா என ஏங்காத 90-ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைய சேவை.
![]()
|
ஒருகாலத்தில் வைஃபை, அன்லிமிடட் இணையம் என்பது அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த சேவையாகப் பார்க்கப்பட்ட நிலையில் ஃபைபர் ஆப்டிக் கேபிள் அறிமுகம் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வைஃபை மாதக் கட்டணத்தைப் பன்மடங்கு குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கின. அதன் பலனாக இன்று குறைந்தபட்சமாக மாதம் ஐநூறு ரூபாய் செலுத்தி விநாடிக்கு 30 எம்பி வேகத்தில் அதிவேக இணைய சேவையை நாம் பெற்று வருகிறோம்.
இந்தியாவில் வீட்டு வைஃபை சந்தையில் ஏர்டெல் ஃபைபர், ஜியோ ஃபைபர் ஆகிய இரண்டுமே போட்டி போட்டு வருகின்றன. நம் வீட்டு வைஃபைகளில் இவை இரண்டில் ஏதாவதொரு ஃபைபர் கண்டிப்பாக இடம்பெறும். விநாடிக்கு 30 எம்பி முதல் 100 எம்பி வேகம் வரை ஜியோ ஃபைபர் வைஃபை மோடம் மூலம் நமக்கு கிடைத்து வந்தது. இது நாம் ஓடிடியில் படம் பார்க்க, ஸ்மார்ட்போன், டேப்லெட், மடிக்கணினி பயன்படுத்த போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது ஜியோ நிறுவனம் விநாடிக்கு ஒரு ஜிபி வேகம் அளிக்கும் அதிநவீன ஜியோ ஏர் ஃபைபர் மோடம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
![]()
|
கண்ணிமைக்கும் நேரத்தில் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்யும் இந்த இணைய சேவையை ஜியோ இணைய சந்தையில் வரும் செப்., 19 ஆம் தேதி களமிறக்கவுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஜியோஃபைபர் பயனாளர்கள், தற்போது ஜியோ ஏர்ஃபைபர் சேவை பெற விரும்புகின்றனர். ஜியோ ஏர்ஃபைபர் அறிமுகம் போட்டி நிறுவனமான ஏர்டலுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் பல வாடிக்கையாளர்கள் ஏர்டெலில் இருந்து ஜியோவுக்கு மாற வாய்ப்புள்ளது.
என்னதான் ஜியோ, தனது புதிய ஏர் ஃபைபர் பற்றி பெருமையடித்துக் கொண்டாலும் ஜியோவின் இணைய வேகம் நெட்வொர்ட் டிராஃபிக் அதிகரிக்கும்போது அதளபாதாளத்துக்குச் சென்று திரும்பும் என்பது அதன் வாடிக்கையாளர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. ஜியோ ஏர் ஃபைபரில் வேகம் குறையவே குறையாது என அந்நிறுவனம் அடித்துக் கூறுகிறது. உண்மையில் ஜியோ ஃபைபரைக் காட்டிலும் ஜியோ ஏர் ஃபைபர் வேகமாக இருக்குமா என இன்னும் சில நாட்களில் டெக் யூடியூப் ரெவ்யூக்கள் மூலம் தெரிந்து விடப்போகிறது. காத்திருப்போம்..!