வங்கிகளில் வைப்பு நிதி முதலீடு செய்வது பெரும்பாலான முதலீட்டாளர்கள் பின்பற்றும் வழியாக அமைகிறது. வைப்பு நிதி முதலீடு பாதுகாப்பானது மற்றும் நிச்சயிக்கப்பட்ட பலனை அளிக்கக்கூடியது என்பதோடு எளிதான முதலீடாகவும் அமைகிறது.
எனினும், வைப்பு நிதி அளிக்கும் வட்டி பலன் வரி விதிப்புக்கு உட்பட்டது என்பதால், இது ஒருவரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரி விதிப்புக்கு உட்படும். வைப்பு நிதி வருமானத்தின் மீது வரி சேமிப்பதற்கு சில வழிகள் இருக்கின்றன.
வரி விலக்கு படிவங்கள்:
வைப்பு நிதி வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால், 10 சதவீதம் டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படும். வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் இல்லை எனில், டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படாது. 60 வயதுக்குட்பட்டவர்கள் 15 ஜி படிவத்தையும், மூத்த குடிமக்கள் 15 எச் படிவத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.
வரி விலக்கு:
வைப்பு நிதி மீதான வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்பட்டு, 15 ஜி படிவம் தாக்கல் செய்யா விட்டாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, தொகையை திரும்ப பெறலாம். பொதுவாக, 15 ஜி படிவத்தை நிதியாண்டு துவக்கத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். புதிய காலாண்டிற்கு முன்பாகவும் சமர்ப்பிக்கலாம்.
வைப்பு நிதி காலம்:
மார்ச் மாத வாக்கில் வரி பிடித்தம் கணக்கு செய்யப்படுவதால், வட்டி குறிப்பிட்ட வரம்பை விட அதிகமாகாத வகையில், இடைப்பட்ட காலத்தில் வைப்பு நிதி கணக்கை துவக்கலாம். ஆண்டு அடிப்படையில் வட்டி இரண்டாக பிரிவதால், வரி பிடித்தம் செய்யப்படுவதை தவிர்க்கலாம்.
குடும்ப உறுப்பினர்கள்:
இதே போல, வாழ்க்கைத்துணை அல்லது பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வைப்பு நிதி துவக்கி வரி விதிப்பை தவிர்க்கலாம். வரி பிடித்தம் தனிப்பட்ட அளவில் செய்யப்படுவதால், இந்த உத்தி வருமான வரி நோக்கில் உதவும்.
குறுகிய காலம்:
மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் வெவ்வேறு வைப்பு நிதி கணக்கு துவக்குவதன் வாயிலாகவும், வட்டி தொகை வரி வரம்பிற்கு மேல் வருவதை தவிர்க்கலாம். குறுகிய கால வைப்பு நிதி முதலீடு செய்யும் உத்தியையும் கையாளலாம்.