சமபங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடு, ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து மாதத்தில் இல்லாத அளவு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்படி, ஆகஸ்ட் மாதம் திறந்த அம்சம் கொண்ட சமபங்கு நிதிகளில் நிகர வரவு, 20,161 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய மாதத்தைவிட இது மூன்று மடங்கு அதிகமாகும். ஸ்மால்கேப் நிதிகள் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளன.
சமபங்கு நிதிகளில், குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த நிதிகளில் முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதும் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. லார்ஜ்கேப் நிதிகளில் இருந்து தொடர்ந்து முதலீடு விலக்கப்படுவதும் நிகழ்ந்துள்ளது.
இதே போல, எஸ்.ஐ.பி., முறையில் மேற்கொள்ளப்படும் சீரான முதலீடும் அதிகரித்து உள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த முதலீடும் உச்சம் தொட்டுள்ளது. அதே நேரத்தில் கடன்சார் நிதிகளில் இருந்து தொகை விலக்கிக் கொள்ளப்படுவதும் அதிகரித்துள்ளது.
தங்க இ.டி.எப்., நிதிகளில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. பணவீக்கம், அமெரிக்க வட்டி விகித சூழல், வளர்ச்சி குறைவு ஆகிய காரணங்களால் தங்க நிதிகள் மீதான ஆர்வமும், முதலீடும் அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.