ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள், வீட்டுக்கடனுக்கான வட்டி விகித பாதிப்பை வாடிக்கையாளர்கள் திறம்பட எதிர்கொள்ள வழி செய்கின்றன.
நீண்ட கால கடன், பொறுப்பான வீட்டுக்கடனை பொறுத்தவரை, வட்டி விகிதத்தின் தாக்கம் முக்கியமாக அமைகிறது. வட்டி விகிதம் உயரும் சூழலில், கடனுக்கான வட்டி விகிதமும் உயரும். வட்டி விகிதம் தொடர்ந்து உயரும் போது, மாதத்தவணை சுமையும் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுவாக, வட்டி விகிதம் உயரும் போது, வங்கிகள் தவணையை உயர்த்தாமல் கடனுக்கான காலத்தை உயர்த்துகின்றன. இதனால் மாதத்தவணை சுமை அதிகரிக்காது என்றாலும், ஒட்டுமொத்தமாக செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கலாம்.
புதிய விதிமுறைகள்
இந்நிலையில், வீட்டுக்கடன் பெற்றவர்கள் வட்டி விகித உயர்வின் தாக்கத்தை திறம்பட நிர்வகிக்க உதவும் வகையில், ரிசர்வ் வங்கி அண்மையில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி வட்டி விகித உயர்வை அடுத்து, கடனுக்கான காலத்தை உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பு அல்லது மாதத்தவணை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பை வங்கிகள் கடன் பெற்றவர்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும் இந்த இரண்டு வாய்ப்பையும், கலந்து செயல்படுத்தும் வாய்ப்பையும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது தவிர, நிலையான வட்டி விகிதத்திற்கு மாறிக்கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.
இதுவரை, வட்டி விகித உயர்வின் போது, பொதுவாக அனைவருக்கும் கடனுக்கான காலத்தை அதிகரித்து வந்துள்ளன. உடனடியாக கடன் சுமையை அதிகரிக்காமல் இருக்க இது உதவினாலும், கடன் காலம் அதிகமாவதால் ஒட்டுமொத்த தொகை அதிகரிக்கும்.
இதனால் அதிக காலம் கடன் செலுத்த வேண்டியிருக்கும். பலரும் ஓய்வு காலம் வரை கடன் செலுத்தும் நிலைக்கும் தள்ளப்படலாம். தனிப்பட்ட கடன்தாரர்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல், பொதுவாக செயல்படுத்தப்படும் முடிவால் இந்த நிலை உண்டாகிறது.
பாதிப்பு குறைவு
எனினும், தற்போது வட்டி விகித உயர்வின் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என புதிய விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதோடு, இது தொடர்பான அனைத்து அம்சங்களையும் தெளிவாக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு வாய்ப்பு தொடர்பான தாக்கம் மற்றும் கட்டணங்கள், பொருந்தக்கூடிய நிபந்தனைகளையும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி விகித உயர்வு தாக்கத்தை எதிர்கொள்ளும் போது, கடன் பெற்றவர்கள் தங்கள் முன் உள்ள வாய்ப்புகளை பரிசீலித்து உரிய தேர்வு செய்யலாம்.
கடன் காலத்தை அதிகரிக்காமல், தவணையை அதிகரிக்க முடியும் என்றால், மொத்தமாக செலுத்த வேண்டிய வட்டி வெகுவாக குறையலாம். எனினும், இது மாத செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடும் நிலையை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அவரவர் சூழலுக்கு ஏற்ற வகையில், சாதக மற்றும் பாதக அம்சங்களை கணக்கிட்டு பொருத்தமான வாய்ப்பை தேர்வு செய்யலாம். வாய்ப்புள்ள போது, கடனுக்கான அசல் தொகையில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவது கடன் சுமையை குறைக்க உதவும். போனஸ் தொகை போன்றவற்றை இதற்கு பயன்படுத்தலாம்.