பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில், சனாதனம் சர்ச்சை எழுப்பப்பட்டால், அதை கவனமாக கையாள வேண்டும் என, தி.மு.க., - எம்.பி.,க்களை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது, தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தான், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு, இன்று துவங்குகிறது. அதில்,
எப்படியும் உதயநிதி மற்றும் சனாதன பேச்சை, பா.ஜ., தரப்பு கிளப்பும் என்று ஸ்டாலின்
எதிர்பார்க்கிறார்.
பா.ஜ., பேச்சுக்கு, உரிய முறையில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என, ஸ்டாலின்
விரும்புகிறாரே தவிர, மூர்க்கமாக அவர்களோடு மோத விரும்பவில்லை.'சனாதனம் குறித்து உதயநிதி பேசியது, ஹிந்துக்களை அழிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல; ஹிந்துக்கள் மத்தியில் இருக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வு மற்றும் வேறுபாடுகளை களைந்து, புதிய சமூகத்தை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான், உதயநிதி பேசினார் என பார்லிமென்டில், தி.மு.க., சார்பில் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்' என, தி.மு.க., - எம்.பி.,க்களிடம்
ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
மொத்தத்தில், சனாதன ஒழிப்பு விவகாரத்தை மேற்கொண்டு வளர்த்துக் கொண்டே போக, தி.மு.க., விரும்பவில்லை. அது தொடர்பான விவாதமோ, கருத்துக்களோ பொது வெளியில் வைக்கப்படும் போது, அதை தி.மு.க.,வினர் கவனமாக எதிர்கொண்டு, அதற்கு உரிய பதிலை சமாதானமாக வெளிப்படுத்த வேண்டும் என்பது தான், ஸ்டாலினின் நிலைப்பாடு.
இதைத்தான், பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிரொலிக்க வேண்டும் என்றும்
ஸ்டாலின் விரும்புகிறார். அதாவது, குதர்க்கமாக பேச வேண்டாம் என, எம்.பி.,க்களுக்கு,
'செக்' வைத்துள்ளார். ஆனால், பார்லிமென்டில் சூழல் எப்படி அமையும் என்பதை
இப்போதைக்கு கணித்துக் கூறமுடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -