வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக கூட்டணியில் பா.ஜ., இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:
நாராயணன் திருப்பதி, பா.ஜ., துணைத்தலைவர்

ஜெயக்குமார் கூறியது போல இப்போது கூட்டணி இல்லை, தேர்தல் காலத்தில் தான் கூட்டணி. நாங்கள் அவர்களுடன் கொள்கையில் ஒத்துப்போக வேண்டிய அவசியம் இல்லை. அண்ணாமலை குறித்து ஜெயக்குமார் பேசியது முற்றிலும் தவறானது. அண்ணாமலை தலைவராக இருக்க தகுதியில்லை என சொல்வதற்கு ஜெயக்குமார் யார்?
கரு நாகராஜன், பா.ஜ.,
ஜெயக்குமார் தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அண்ணாமலையையும், தமிழக பா.ஜ.,வையும் பிரித்து பார்க்க முடியாது. தகுந்த நேரத்தில் அண்ணாமலை அதற்கு பதில் அளிப்பார்.
திருமாவளவன், வி.சி.க தலைவர்

அண்ணாமலை ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி நல்லிணக்கத்திற்கு முரணாக பேசி வருகிறார். ஜெயக்குமார் வெளிப்படுத்திய இந்த கருத்து வரவேற்கத் தக்கது. அதிமுக தன்மானத்துடன் ஒரு முடிவை எடுத்திருப்பதாக கருதுகிறேன். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் பொதுமக்கள் வரவேற்பார்கள். அதிமுக தனித்து போட்டியிட்டால், அவர்களின் ஓட்டு வங்கியை தக்க வைக்கும்.
ஜி.கே.வாசன், த.மா.கா தலைவர்

பா.ஜ., இந்தியாவில் பெரிய கட்சி. அதிமுக - பா.ஜ., கூட்டணி மக்களின் நம்பிக்கையை பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதே சரியானது.
வி.பி.துரைசாமி, தமிழக பா.ஜ., துணைத்தலைவர்
ஜெயக்குமார் பேசியது குறித்து அண்ணாமலை தான் பதில் சொல்லியாக வேண்டும். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஜெயக்குமார் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.,
தற்போது கூட்டணி இல்லை, தேர்தலின்போது முடிவெடுக்கப்படும் என ஜெயக்குமார் பேசியதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. அதிமுக, பா.ஜ., தனியாக நின்றாலும், கூட்டணி அமைத்தாலும், எந்தவித பாதிப்பும் ஏற்படாது. திமுக கூட்டணி, அக்கட்சிகளை தோற்கடிக்கும்.