ஏ.சிரில் சகாயராஜ், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 2.23 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ஒவ்வொரு கார்டிலும் நிச்சயமாக ஒரு பெண்மணி இருப்பார். அத்தி பூத்தாற்போல், 1,000 அல்லது, 2,000 குடும்ப அட்டைகளில் பெண்களின் பெயர்கள் இல்லாமல் இருக்கக் கூடும்.
திராவிட மாடல் அரசு, மொத்தமுள்ள கார்டுகளில் இருந்து, 1 கோடியே 6 லட்சத்து 50,000 பெண்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பெண்மணிக்கும் மாதந்தோறும், 1,000 ரூபாய் வீதம், 'உரிமைத் தொகை' வழங்கத் துவங்கியுள்ளது.
இந்த பயனாளிகளை எந்த அளவுகோல் கொண்டு தேர்ந்தெடுத்தனர் என்பதை திராவிட மாடல் அரசே அறியும். காரணம், சொந்த வீடும், காரும் வைத்துள்ளவர்களுக்கும் இந்த மகளிர் உரிமைத் தொகை கிடைத்துள்ளது.
வாக்காளர்களுக்கு, ஓட்டளிக்க பணம் கொடுப்பது நாடு விடுதலையான நாள் முதலாகவே நடந்து வருகிறது. வேட்பாளர்கள் பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் அதை பெறுவதும் தேர்தல் நடத்தை விதிகளின் படி குற்றம் என்று தேர்தல் கமிஷன் கதறிக் கொண்டிருந்தாலும், கொடுப்பதும், பெறுவதும் தங்கு தடையின்றி நடக்கவே செய்கிறது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது இதுவரை இலை மறை, காய் மறையாக இருந்தது. திராவிட மாடல் அரசு, 'மகளிர் உரிமைத் தொகை' என்ற, 'லேபிள்' ஒட்டி சட்டபூர்வமாக்கியுள்ளது.
இதன்படி, ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் அமர்வதற்காக ஓட்டு ஒன்றுக்கு 1,000 - 2,000, இடைத்தேர்தல்களில், 5,000 - 10,000 ரூபாய் என்றிருந்ததை, திராவிட மாடல் அரசு, 60,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
இதை படிப்பவர்களுக்கு நகைச்சுவை போல தெரியலாம். ஆனால், நம் முதல்வர், மகளிர் உரிமைத் தொகையை, ஆட்சியில் அமர்ந்த நாள் முதலாக வழங்க இயலாததற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது. மொத்தம், 30 மாதங்கள் என கணக்கிட்டால், 30 x 1,000 = 30,000 ரூபாய்- கேரண்டி என்றும் உத்தரவாதம் வேறு வழங்கி இருக்கிறார். ஆக, எதிர்வரும் தேர்தல்களில், ஓட்டு ஒன்றுக்கு ஸ்டாலின் நிர்ணயித்துள்ள தொகை 30,000 ரூபாய்.
lll
மது விற்பனைக்கு ஆய்வு ஒரு கேடா?
பொன்மணி
ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: 'டாஸ்மாக்' மது விற்பனையை முழுமையாக கணினி மயமாக்கும்
திட்டத்தில், கூடுதலாக இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய,
கேரள, ஆந்திர மாநிலங்களுக்கு சென்று வந்த அதிகாரிகள், தற்போது ஜார்க்கண்ட்
மாநிலத்திற்கும் செல்ல இருக்கின்றனர்.
நம் மாநிலம் கல்வி, வேளாண்மை
போன்றவற்றில் சிறந்து விளங்க, துறை சார்ந்த அதிகாரிகளை பிற மாநிலங்களுக்கு
அனுப்பி ஆய்வு செய்து, அங்குள்ள சிறப்பான பல நடைமுறைகளை செயல்படுத்த
முயன்றால், அந்த செயலை பாராட்டலாம்...
மக்களுக்கும், நாட்டிற்கும் சேவையாற்றும்வருவாய், காவல், மருத்துவம், நெடுஞ்சாலை என்று எவ்வளவோ துறைகள் உள்ளன.
அத்துறைகளைச்
சேர்ந்த அதிகாரிகளை, பல மாநிலங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்து, அங்குள்ள பல
நல்ல திட்டங்களை இங்கும் நடைமுறைப்படுத்த முன்வந்தால், இந்த அரசை வாயார
வாழ்த்தலாம்.
ஆனால், பல குடும்பங்களின் நிம்மதியை குலைக்கும், பலரது
உயிரை பறிக்கும் கேடு கெட்ட மது விற்பனையை நவீனப்படுத்துவதற்காக, அண்டை
மாநிலங்களில் ஆய்வு நடத்தும் திராவிட மாடல் அரசை என்ன சொல்வது?
மதுவிலக்கு
மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி, 'காலையிலேயே மதுக்கடைகளை
திறந்து, 'குடி'மகனின் தாகம் தணிப்பேன்' என்று கூறி, மது விற்பனையை மேலும்
அதிகரிக்க எண்ணுகிறார்.
மக்கள் நல்வாழ்வு அமைச்சரோ, 'குடித்து
சீரழிந்து அதில் இருந்து மீண்டு வந்தால், அரசு வேலை' என்று, மக்கள் நலன்
பற்றி கவலைப்படாமல் குடிக்கத் துாண்டுகிறார்.
மது விற்பனை வாயிலாக கிடைக்கும் வருமானத்தை பாவ பணமாக நினைக்க வேண்டிய அரசு, அந்த வருமானத்தை அதிகரிக்க திட்டமிடுவது அநியாயம்!
lll
ஹிந்து விரோதிகளுக்கும் கடிவாளம் போடுமா?
ஆர்.
மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் சொத்து குவிப்பு
வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றமே
முன்வந்து விசாரிக்கத் துவங்கியிருப்பது, நீதித் துறையின் மீது மக்களுக்கு
நம்பிக்கையை ஏற்படுத்திஇருக்கிறது.
சாமானியனாக பொதுவாழ்க்கையில்
நுழையும் அரசியல்வாதிகள், ஓரிரு முறை அமைச்சராக பதவி வகித்தால் போதும்...
70 தலைமுறைக்கு தேவையான பல ஆயிரம் கோடிகளை சேர்த்து விடுகின்றனர்.
எதிர்க்கட்சியாக
இருக்கும்போது, தங்கள் மீதான வழக்குகளை எதிர்கொள்ளாமல் இழுத்தடித்து,
ஆளுங்கட்சி ஆனவுடன் லஞ்ச ஒழிப்புத் துறை உதவியுடன், வழக்குகளை வாபஸ் பெறச்
செய்வது, சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக்கி வழக்கை நீர்த்து போகச் செய்வது என,
சட்டத்தில் இருக்கும் சந்து பொந்துகளில் புகுந்து, தங்களுக்கு சாதகமான
தீர்ப்புகளை பெற்று, தங்களை பரிசுத்தமானவர்களாக காட்டிக் கொள்கின்றனர்.
ஊழல்
செய்வதிலும், அதிலிருந்து தப்புவதிலும், தி.மு.க., - அ.தி.மு.க., என, இரு
கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. எனவே தான், 'இரு கட்சிகளும் ஒரே
குட்டையில் ஊறிய மட்டைகள்' என, அன்றே சொன்னார் காமராஜர்.
'சட்டம்
ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் தான் விளக்கு' என்ற இவர்களது
வழிகாட்டி அண்ணாதுரையின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், அந்த
இருட்டுக்குள் புகுந்து, தாங்கள் செய்யும் தில்லுமுல்லுகளை திறமையான
வக்கீல்களை வைத்து, வெளிச்சத்துக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
எதிர்க்கட்சியில்
இருந்தபோது, செந்தில் பாலாஜியை, 'அக்மார்க் அயோக்கியர்' என, முத்திரை
குத்திய முதல்வர் ஸ்டாலின், தன் கட்சிக்கு வந்ததும், அவருக்கு முக்கிய
துறைகளை வாரி வழங்கி அழகு பார்த்தார்.
பழைய வழக்குகளில் செந்தில்
பாலாஜியை அமலாக்க துறை கைது செய்தபோது, 'அப்பாவியை அமலாக்க துறை சித்ரவதை
செய்கிறது' என, பிளேட்டை திருப்பி போட்டார்.
இப்படி, இரட்டை வேடம்
போடும் அரசியல்வாதிகளையும், ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும்
ஆ.ராஜா, உதயநிதி போன்றோர் மீதும், உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு
பதிவு செய்து கடிவாளம் போடுமா?
lll