சமூக வலைதளம், சின்னத்திரை, சினிமா என பிரபலம் அடைந்து, கேன்சர் நோயாளிகளுக்காக தன் கூந்தலை கத்தரித்துக் கொடுத்த சசிலயா: திண்டுக்கல் தான் சொந்த ஊர். அங்கு தான் படித்தேன், வளர்ந்தேன். சின்ன வயசுல, எனக்கு திக்குவாய் பிரச்னை இருந்தது.
அதனால் பேசவே கூச்சப்படுவேன். எங்க அப்பா தான் தைரியம் கொடுத்து பேச சொல்லுவாரு. எனக்கு கூச்சம் போக, பள்ளியில் பேச்சுப் போட்டியிலும் சேர்த்து விட்டார்.
முதல் மேடையில் வணக்கம் என்று மட்டும் சொல்லிட்டு, அழுதபடி கீழே இறங்கிட்டேன்.
ஆனாலும், அவர் விடலையே... அடுத்தடுத்து பல மேடைகளில் ஏற்றினார். ஒரு கட்டத்தில் என் பேச்சுக்களாலேயே அறியப்பட்டேன். பள்ளி, கல்லுாரிகளில் பல பரிசுகளையும் வாங்கினேன். 1,000க்கும் அதிகமான மேடைகளில் பேசி விட்டேன்.
தாய்மொழி தமிழ் மீது எனக்கு தீராப்பற்று உண்டு. அதனால், என் மகனுக்கு யுகன் சர்வேஷ் என, தமிழ்க் கடவுளான முருகனின் பெயரை வைத்தேன்.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் வழுக்கை தலையுடன் இருந்தனர். என்னவென்று விசாரித்ததில், கேன்சரால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தது தெரியவந்தது.
அதோடு, தன்னம்பிக்கை இழந்து வேலைக்கோ, வெளியிலோ செல்லவும் தயங்கி கொண்டிருந்தனர். அது என் மனதை ரொம்பவும் பாதித்து விட்டது.
பட்டுப்புடவை, நகைகள் அணிந்து அலங்காரத்தோடு, ஒரு ஏழையிடம் பேசுவது எப்படிப் பொருத்தமற்றதோ, அதேபோல் நீளமான கூந்தலோடு அவர்களுடன் பேசுவது பொருத்தமற்றது என நினைத்தேன்.
என் முடியை அவர்களுக்கு தானமாக வழங்கிவிட்டு, நானும் அவர்களுடன் இருப்பதாக சொல்லி நம்பிக்கை தெரிவித்தேன். தைரியமாக வெளியில் வந்து சமூகத்தை எதிர்கொள்ள முடியும் என, தன்னம்பிக்கையுடன் பேசினேன். அப்போது முதல் கூந்தல் வளர்ப்பது இல்லை.
நாம் என்ன செய்தாலும், இந்த உலகம் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருக்கும். நாம் வெற்றி பெறும் வரை, நம் காதுகளை செவிடாக வைத்திருக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களிடம் முயற்சியும், பொறுமையும் இல்லை. எதுவும் உடனே கிடைத்து விட வேண்டும் என நினைக்கின்றனர்.
அவர்கள், சிறு தோல்விகளுக்கும் துவண்டு விடுகின்றனர். நாம் விரும்புவதை இந்தப் பிரபஞ்சம் நிச்சயம் நமக்கு தரும். பொறுமையோடும், நம்பிக்கையோடும் காத்திருந்தால் அது நிச்சயம் கிடைக்கும்.
இந்த வாழ்க்கையை வாழ, 'பிக்னிக்' போலவே பூமிக்கு வந்திருக்கிறோம். இதை, அடுத்தவருக்காக இல்லாமல், நமக்கு பிடித்த மாதிரி வாழ்வோமே!